பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 01. ஆறு ஆதாரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்

கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்

மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்

காலங்கண் டான்அடி காணலும் ஆமே.  1 

 

 

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்

மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி

போதா லயத்த விகாரந் தனிற்போத

மேதாதி ஆதார மீதான உண்மையே.  2 

 

 

மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால்

தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்

பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரங் 

கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே.  3 

 

 

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்

மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி

போதா லயத்துப் புலன்கர ணம் புந்தி

சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே.  4 

 

 

மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி

ஆதார சோதனை அத்துவ சோதனை

தாதார மாகவே தானெழச் சாதித்தால்

ஆதாரஞ் செய்போக மாவது காயமே.  5 

 

 

ஆறந்த மும்கூடி யாகும் உடம்பினிற் 

கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்

ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே 

ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே.  6 

 

 

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்

போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்

ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்

ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.  7 

 

 

ஆயு மலரின் அணிமலர் மேலது

வாய இதழும் பதினாறும் அங்குள

தூய அறிவு சிவானந்த மாகிப்போய்

மேய அறிவாய் விளைந்தது தானே.  8 

 

திருச்சிற்றம்பலம்