பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 12. சிவ வேடம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அருளால் அரனுக் கடிமைய தாகிப்

பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி

இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்

தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே.  1 

 

 

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா

உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்

உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார்

கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே.  2 

 

 

மயலற் றிருளற்று மாமன மற்றுக்

கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்

தயலற் றவரோடும் தாமே தாமாகிச்

செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே.  3 

 

 

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்

வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே

நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்

தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.  4 

திருச்சிற்றம்பலம்