பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 07. அருளுடைமையின் ஞானம் வருதல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்

பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்

பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு

பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.  1 

 

 

தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்

உமிழ்வது போல உலகந் திரிவார்

அவிழு மனமும்எம் ஆதியறிவுந்

தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே.  2 

 

 

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்

நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்

எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்

தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.  3 

 

 

முன்னின் றருளு முடிகின்ற காலத்து

நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்

பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்

முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.  4 

 

 

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்

சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்

சிவனரு ளால்வினை சேரகி லாமை

சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே.  5 

 

 

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி

நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது

மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்

அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.  6 

 

 

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட

மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்

நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்

ஆயத்தே ரேறி யவனிவ னாமே.  7 

 

 

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்

அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர்

அவ்வுல கத்தே யரனடி கூடுவர்

அவ்வுல கத்தே யருள்பெறு வாரே.  8 

 

 

கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்

மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்

சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்

எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே.  9 

 

 

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்

தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று

கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல

வீடும் அளவும் விடுகின் றிலேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

இளையான்குடி மாற நாயனார்
View Details
சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details
கூற்றுவ நாயனார்
View Details