பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 05. தவம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்

நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை

இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை

படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.  1 

 

 

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்

செம்மா தவத்தின் செயலின் பெருமையும்

அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லால்

இம்மா தவத்தின் இயல்பறி யாரே.  2 

 

 

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்

சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்

மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்

பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.  3 

 

 

இருந்து வருந்தி எழிற்றவஞ் செய்யும்

பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே

இருந்திந் திரனே யெவரே வரினுந்

திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே.  4 

 

 

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்

பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்

அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்

விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.  5 

 

 

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை

முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை

தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்

மன்னெய்த வைத்த மனமது தானே.  6 

 

 

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்

பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே

அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி

இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.  7 

 

 

சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்

மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்

பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்

ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.  8 

 

 

தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்

தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்

தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு

தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.  9 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வேலால் கடலைச் சிதைத்தல்
View Details
ஸ்ரீ முத்து வடுகநாத சித்தர்
View Details
சப்தகந்தலிங்க சித்தர்
View Details