பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 03. ஞாதுரு ஞான ஞேயம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்

பாங்கான பாசம் படரா படரினும்

ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே

நீங்கா அமுத நிலைபெற லாமே.  1 

 

 

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்

ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்

ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்

ஆயத்தில் நின்ற அறிவறி வாரே.  2 

 

 

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்

தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு

தானென்ற பூவை யவனடி சாத்தினால்

நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.  3 

 

 

வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து

மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு

நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்

அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.  4 

 

 

முன்னை யறிவறியாதஅம் மூடர்போற்

பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான்

தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்

தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.  5 

 

 

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்

கோணாத போகமுங் கூடாத கூட்டமும்

நாணாத நாணமும் நாதாந்த போதமுங்

காணா யெனவந்து காட்டினன் நந்தியே.  6 

 

 

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்

மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்

மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்

மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.  7 

 

 

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்

வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி

உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே

பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.  8 

 

 

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி

பாலித்த முத்திரை பற்றும் பரஞானி

ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற

மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.  9 

திருச்சிற்றம்பலம்