பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 10. சகமார்க்கம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது

மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்

பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்

துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே.  1 

 

 

மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்

குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார் 

வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்

உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.  2 

 

 

யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்

யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி

யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி

யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.  3 

 

 

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்

யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்

போகம் புவியிற் புருடார்த்த சித்திய

தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.  4 

 

 

ஆதார சோதனை யானாடி சுத்திகள்

மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி

போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி

சாதா ரணங்கெட லாஞ்சக மார்க்கமே.  5 

 

 

பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை

அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்

கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்

வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே.  6 

 

 

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்

வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்

உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்

பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.  7 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சிறப்புலி நாயனார்
View Details
சமணர் ஏவிய யானை வதம்
View Details
தடாதகைப் பிராட்டியாரின் பிறப்பு
View Details