பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 07. யோகம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்

தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்

சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்

குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.  1 

 

 

ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லது

ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்

ஆழி அமரும் அரியயன் என்றுளார்

ஊழி முயன்றும் ஓருச்சியு ளானே.  2 

 

 

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்

சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது

ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு

நாவி யணைந்த நடுதறி யாமே.  3 

 

 

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்

கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்

சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்

முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.  4 

 

 

எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்

பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா

வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்

வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.  5 

 

 

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ ராகும்

விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்

விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.  6 

 

 

பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்

காணில் தனது கலவியு ளேநிற்கும்

நாணில் நரக நெறிக்கே வழிசெயும்

ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.  7 

 

 

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்

எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி

சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்

அத்த னிவனென்றே அன்புறு வார்களே.  8 

 

 

யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்

ஆகத் தருகிரி யாதி சரியையாந்

தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்

ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.  9 

 

 

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்

யோக விசேடமே அட்டாங்க யோகமாம்

யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்

யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.  10 

 

திருச்சிற்றம்பலம்