பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 04. கடுஞ் சுத்த சைவம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி 

ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்

பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்

சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.  1 

 

 

உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து

மடலான மாமாயை மற்றுள்ள நீவப்

படலான கேவல பாசந் துடைத்துத்

திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.  2 

 

 

சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்

முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்

அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்

சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.  3 

 

 

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே

தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்

தானென்று நானென்ற தத்துவ நல்கலால்

தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே.  4 

 

 

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்

ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்

மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்

பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.  5 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஆலவாயில் எல்லை வகுத்தல்
View Details
உரோம முனி சித்தர்
View Details
ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள்
View Details