பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நவாக்கரி சக்கர நானுரை செய்யின்

நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக

நவாக்கரி எண்பத் தொருவகை யாக

நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே.  1 

 

 

சௌமுதல் அவ்வவொடு ஹௌவுட னாங்கிரீம்

கெளவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்

றொவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்

செவ்வுள் எழுந்து சிவாய நமவென்னே.  2 

 

 

நவாக்கரி யாவது நானறி வித்தை

நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்

நவாக்கரி மந்திர நாவுளே ஓத

நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.  3 

 

 

நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம்

உரந்தரு வல்வினை யும்மைவிட் டோடிச்

சிரந்தரு தீவினை செய்வ தகற்றி

வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.  4 

 

 

கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை

கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை

வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்

நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே.  5 

 

 

நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறா

நினைத்திடுஞ் சக்கர மாதியு மீறு

நினைத்திடு நெல்லொடு புல்லினை யுள்ளே

நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.  6 

 

 

நேர்தரு மத்திரு நாயகி யானவள்

யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை

கார்தரு வண்ணங் கருதின கைவரும்

நார்தரு வண்ணம் நடத்திடு நீயே.  7 

 

 

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாங்

கடந்திடுங் காலனும் எண்ணிய நாளும்

படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல

அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.  8 

 

 

அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்

அடைந்திடு மாதி யருளுந் திருவும்

அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்

அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.  9 

 

 

அறிந்திடுவார்கள் அமரர்க ளாகத்

தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்

பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி

முரிந்திடு வானை முயன்றிடு நீரே.  10 

 

 

நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்

பாரணி யும்ஹிரீ முன்ஸ்ரீமீறாந்

தாரணி யும்புகழ்த் தையல்நல் லாள்தனைக்

காரணி யும்பொழிற் கண்டுகொள் ளீரே.  11 

 

 

கண்டுகொள் ளுந்தனி நாயகி தன்னையும்

மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்

பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்

நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.  12 

 

 

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்

நாடுடை யார்களும் நம்வச மாகுவர்

மாறுடை யார்களும் வாழ்வது தானிலை

கூறுடை யாளையுங் கூறுமின் நீரே.  13 

 

 

கூறுமின் எட்டுத் திசைக்குந் தலைவியை

யாறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வென

மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந்

தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.  14 

 

 

சேவடி சேரச் செறிய இருந்தவர்

நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்

பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்

மாவடி காணும் வகையறிவாரே.  15 

 

 

ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கர

மைம்முத லாக அமர்ந்திரீ மீறாகும்

அம்முத லாகி யவர்க்குடை யாடனை

மைம்முத லாக வழுத்திடு நீயே.  16 

 

 

வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப்

பகுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்

தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை

முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.  17 

 

 

கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடிற்

கொண்ட இம் மந்திரங் கூத்தன் குறியதா

மன்றினுள் வித்தையு மானுடர் கையதாய்

வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.  18 

 

 

மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்

சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்

பல்லிய லாகப் பரந்தெழு நாட்பல

நல்லியல் பாலே நடந்திடுந் தானே.  19 

 

 

நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாந்

தொடர்ந்திடுஞ் சொல்லொடு சொற்பொருள் தானும்

கடந்திடுங் கல்விக் கரசிவ ளாகப்

படர்ந்திடும் பாரிற் பகையில்லை தானே.  20 

 

 

பகையில்லை கௌமுத லையது வீறா

நகையில்லை சக்கர நன்றறி வார்க்கு

மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்

வகையில்லை யாக வணங்கிடுந் தானே.  21 

 

 

வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை

நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்

கலங்கிடுங் காம வெகுளி மயக்கந்

துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.  22 

 

 

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்

தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்

தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்

தானே வணங்கித் தலைவனு மாமே.  23 

 

 

ஆமே அனைத்துயி ராகிய அம்மையுந்

தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்

ஆமே யவனடி போற்றி வணங்கிடிற்

போமே வினைகளும் புண்ணிய னாகுமே.  24 

 

 

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்

கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுங்

தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்

அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.  25 

 

 

தானது கம்மீறிக் கௌவது ஈறாம்

நானது சக்கர நன்றறி வார்க்கெலாம்

கானது கன்னி கலந்த பராசத்தி

கேளது வையங் கிளரொளி யானதே.  26 

 

 

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரிற்

களிக்கும்இச் சிந்தையிற் காரணங் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வமுண் டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.  27 

 

 

அறிந்திடுஞ் சக்கரம் அருச்சனை யோடே

எறிந்திடும் வையத் திடரவை காணின்

மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்

பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.  28 

 

 

புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாங்

குகையில்லை கொல்வ திலாமையி னாலே

வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்

சிகையில்லை சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.  29 

 

 

சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர்

காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்

பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது

மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.  30 

 

 

ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாங்

களியது சக்கரங் கண்டறி வார்க்குத்

தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்

பணிவது பஞ்சாக் கரமது வாமே.  31 

 

 

ஆமே சதாசிவ நாயகி யானவள்

ஆமே அதோமுகத் துள்ளறி வானவள்

ஆமே சுவையொளி யூறோசை கண்டவள்

ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே.  32 

 

 

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்

டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்

மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளுங்

கண்ணுளும் மெய்யுளுங் காணலு மாமே.  33 

 

 

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன

காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்

காணலு மாகுங் கலந்து வழிசெயக்

காணலு மாகுங் கருத்துற நில்லே.  34 

 

 

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்

கண்டிடும் உள்ளங் கலந்தெங்குந் தானாகக்

கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்

விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.  35 

 

 

மெய்ப்பொரு ளெளமுதல் ஹௌவது ஈறாக்

கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்

தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி

நற்பொரு ளாக நடுவிருந் தாளே.  36 

 

 

தாளதி னுள்ளே சமைந்தமு தேஸ்வரி

காலது கொண்டு கலந்துற வீசிடில்

நாளது நாளும் புதுமைகள் கண்டபின்

கேளது காயமுங் கேடில்லை காணுமே.  37 

 

 

கேடில்லை காணுங் கிளரொளி கண்டபின்

நாடில்லை காணும் நாண்முத லற்றபின்

மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்

காடில்லை காணுங் கருத்துற் றிடத்துக்கே.  38 

 

 

உற்றிட மெல்லாம் உலப்பில்பா ழாக்கிக்

கற்றிட மெல்லாங் கடுவெளி யானது

மற்றிட மில்லை வழியில்லை தானில்லை

சற்றிடமில்லை சலிப்பற நின்றிடே.  39 

 

 

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்

நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்

நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிட

நின்றிடும் மேலை விளக்கொளி தானே.  40 

 

 

விளக்கொளி சௌமுத லெளவது ஈறா

விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்

விளக்கொளி யாகிய மின்கொடி யாளை

விளக்கொளி யாக விளங்கிடு நீயே.  41 

 

 

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்

விளங்கிடு மெல்லிய லானது வாகும்

விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப்பொருளை

விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.  42 

 

 

தானே வெளியென எங்கும் நிறைந்தவள்

தானே பரம வெளியது வானவள்

தானே சகலமு மாக்கி அழித்தவள்

தானே யனைத்துள அண்ட சகலமே.  43 

 

 

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்

பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்

குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்

கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.  44 

 

 

கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாம்

உலப்பறி யாருட லோடுயிர் தன்னை

சிலப்பறி யார்சில தேவரை நாடித்

தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.  45 

 

 

தானே எழுந்தஅச் சக்கரஞ் சொல்லிடின்

மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்

தேனே யிரேகை திகைப்பற ஒன்பதில்

தானே கலந்த வரையெண்பத் தொன்றுமே.  46 

 

 

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்

வென்றிகொள் மேனிமதிவட்டம் பொன்மையாங்

கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்

என்றிய லம்மை எழுத்தவை பச்சையே.  47 

 

 

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய

வாய்ந்தஇப் பெண்ணெண்பத் தொன்றில் நிரைத்தபின்

காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமு

மாய்ந்தலத் தாமுயி ராகுதி பண்ணுமே.  48 

 

 

பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி

எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்

நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்

துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே.  49 

 

 

ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி

போகின்ற சாந்து சவாது புழுகுநெய்

ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ்

சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே.  50 

 

 

வைத்திடும் பொன்னுடன் மாதவ நோக்கிடிற்

கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்

தச்சிது வாகச் சமைத்தஇம் மந்திரம்

அர்ச்சனை யாயிரம் ஆயிரம் சிந்தியே.  51 

 

 

சிந்தையி யுள்ளே திகழ்தரு சோதியாய்

எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது

பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு

முந்தை கிலீமெழ முன்னிருந் தாளே.  52 

 

 

இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்

இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்

இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே

இருந்தனர் இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.  53 

 

 

கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்

கண்டஇம் முத்தங் கனல்திரு மேனியாய்ப்

பண்டமர் சோதிப் படரித ழானவள்

உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.  54 

 

 

உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்

கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்

மணந்தெழும் ஓசை யொளியது காணுந்

தணந்தெழு சக்கரந் தான்தரு வாளே.  55 

 

 

தருவழி யாகிய தத்துவ ஞானங்

குருவழி யாகுங் குணங்களுள் நின்று

கருவழி யாகுங் கணக்கை யறுத்துப்

பெருவழி யாக்கும் பேரொளி தானே.  56 

 

 

பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்

சீரொளி யாகித் திகழ்தரு நாயகி

காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்

பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.  57 

 

 

பரந்த கரம்இரு பங்கயமேந்திக்

குவிந்த கரமிரு கொய்தளிர்ப் பாணி

பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்

இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.  58 

 

 

மணிமுடி பாதஞ் சிலம்பணி மங்கை

அணிபவ ளன்றி யருளில்லை யாகுந்

தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்

பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.  59 

 

 

பரந்திருந் துள்ளே அறுபது சத்தி

கரந்தன கன்னிகள் அப்படி சூழ

மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்

சிறந்தவர் ஏத்தும் சிரீம்தன மாமே.  60 

 

 

தனமது வாகிய தையலை நோக்கி

மனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்

கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்

தினகர னாரிட செய்திய தாமே.  61 

 

 

ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்

பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்

போகின்ற பூரண மாக நிறைந்தபின்

சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.  62 

 

 

ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்

ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்

ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரு

ஆகின்ற ஐம்பத் தறுவகை சூழவே.  63 

 

 

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்

ஆங்கணி முத்தம் அழகிய மேனியுந்

தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்

ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.  64 

 

 

பாசம தாகிய வேரை யறுத்திட்டு

நேசமா தாக நினைத்திரு மும்முளே

நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டிற்

காசினி மேலமர் கண்ணுத லாகுமே.  65 

 

 

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி

பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்

விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார

மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.  66 

 

 

மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்

கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்

விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்

தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.  67 

 

 

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்

தோங்கி எழுங்கலைக் குள்ளுணர் வானவள்

ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட

வாங்கிய நாதம் வலியுட னாகுமே.  68 

 

 

நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்

பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்

பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்

ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.  69 

 

 

அன்றிரு கையில் அளந்த பொருள்முறை

இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை

மன்றது காணும் வழியது வாகவே

கண்டங் கிருந்தவர் காரணி காணுமே.  70 

 

 

காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்

காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்

காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்

காரணி தன்னரு ளாகிநின் றாளே.  71 

 

 

நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடிற்

கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டிற்

கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்

மன்றினி லாடு மணியது காணுமே.  72 

 

 

கண்டஇச் சத்தி இருதய பங்கயங்

கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்

பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட

இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே.  73 

 

 

இருந்தவிச் சத்தி இருநாலு கையிற்

பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்

கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்

குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.  74 

 

 

உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்

பரந்த பவளமும் பட்டாடை சாத்தி

மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து

தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.  75 

 

 

பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு

கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலாற்

கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்

எச்ச விடைச்சி இனிதிருந் தாளே.  76 

 

 

தாளதி னுள்ளே தாங்கிய சோதியைக்

காலது வாகக் கலந்துகொள் என்று

மாலது வாக வழிபாடு செய்துநீ

பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.  77 

 

 

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்

கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்

பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது

தன்னமர் கூபந் தழைத்தது காணுமே.  78 

 

 

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள

தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்

ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து

பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.  79 

 

 

சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்

வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு

காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு

கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.  80 

 

 

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்

எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்

எண்ணிய எண்ணங் கடந்துநின் றாளே.  81 

 

 

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு

தொடர்ந்தணி முத்து பவளங்கச் சாகப்

படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு

மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.  82 

 

 

நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே

கண்டிடு மேரு வணிமாதி தானாகிப்

பண்டைய வானின் பகட்டை யறுத்திட்

டொன்றிய தீபம் உணர்ந்தார்க் குண்டாமே.  83 

 

 

உண்டோர் அதோமுகம் உத்தம மானது

கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி

கொண்ட முகமைந்து கூறுங் கரங்களும்

ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.  84 

 

 

நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்

பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகுங்

கண்மணி தாமரைக் கையில் தமருகம்

பொன்மணி பூணாரம் பூசனை யானதே.  85 

 

 

பூசனைச் சத்திகள் எண்ணைவர் சூழவே

நேசவள் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்

காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்

மாசடை யாமல் மகிழ்ந்த்திருந் தார்களே.  86 

 

 

தாரத்தி னுள்ளே தங்கிய சோதியைப்

பாரத்தி னுள்ளே பரத்துள் எழுந்திட

வேரது வொன்றிநின் றெண்ணு மனோமயங்

காரது போலக் கலந்தெழு மண்ணிலே.  87 

 

 

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்

விண்ணில் எழுந்து சிவாய நமவென்று

கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்

கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.  88 

 

 

என்றங் கிருந்த அமுத கலையிடைச்

சென்றங் கிருந்த அமுத பயோதரி

கண்டங் கரமிரு வெள்ளிபொன் மண்ணடை

கொண்டங் கிருந்தது வண்ணம் அமுதே.  89 

 

 

அமுதம தாகிய அழகிய மேனி

படிகம தாகப் பரந்தெழு முள்ளே

குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்

கெமுதம தாகிய கேடிலி தானே.  90 

 

 

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்

நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்

பூவிலி பூவிதழ் உள்ளே யிருந்திவர்

நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.  91 

 

 

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியுங்

கண்டது சோதி கருத்துள் இருந்திடக்

கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு

விண்டவௌ காரம் விளங்கின அன்றே.  92 

 

 

விளங்கிடு வானிடை நின்றவை யெல்லாம்

வணங்கிடு மண்டலம் மன்னுயிராக

நலங்கிளர் நன்மைகள் நாரணனொத்துச்

சுணங்கிடை நின்றிவை சொல்லலு மாமே.  93 

 

 

ஆமே அதோமுக மேலே அமுதமாய்த்

தாமே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்

காமேல் வருகின்ற கற்பக மானது

பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.  94 

 

 

பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட

அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்

மற்கட மாகிய மண்டலந் தன்னுளே

பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.  95 

 

 

பேதை யிவளுக்குப் பெண்மை அழகாகும்

தாதை யிவளுக்குத் தாணுவு மாய்நிற்கும்

மாதை யவளுக்கு மண்ணுந் திலகமாய்க்

கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.  96 

 

 

குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்

நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்

பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே

இருந்தனள் காணும் இடம்பல கொண்டே.  97 

 

 

கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்

கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது

பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்

இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே.  98 

 

 

இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை

இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை

இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்

இல்லடைந் தானுக் இல்லாதில் லானையே.  99 

 

 

ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறி

ஆனை யிருக்கும் அறுபத்து நாலொளி

ஆனை யிருக்கும் அறுபத்து நாலறை

ஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே. 100

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details
கூற்றுவ நாயனார்
View Details
கால் மாறியாடல்
View Details