பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 06. வயிரவி மந்திரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி

தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்

பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்

சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.  1 

 

 

அந்தம் பதினாலும் அதுவே வயிரவி

முந்து நடுவும் முடிவும் முதலாகச்

சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி

அந்தமும் ஆதியும் ஆகிநின்றாளே.  2 

 

 

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்

போகின்ற பூதம் பொருந்து புராதரர்

சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்

போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.  3 

 

 

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்

எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி

பண்ணிய வன்னி பகலோன் மதியீறு

திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே.  4 

 

 

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்

பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்

பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு

உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.  5 

 

 

ஓதிய நந்தி உணரும் திருவருள்

நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்

போதம் இருபத்து எழுநாள் புணர்மதி

சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே.  6 

 

 

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு

நாலாங் கரமுள நாகபா சாங்குச

மாலங் கயனறி யாத வடிவுக்கு

மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே.  7 

 

 

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி

சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை

கல்லியல் ஒப்பது காணும் திருமேனி

பல்லியல் ஆடையும் பன்மணி தானே.  8 

 

 

பன்மணி சந்திர கோடி திருமுடி

சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி

நன்மணி சூரிய சோம நயனத்தள்

பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.  9 

 

 

பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்

ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்

பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்

சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே.  10 

 

 

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்

எண்டிசை யோகி இறைவி பராசக்தி

அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி

புண்டரி கத்தினுள் பூசனை யாளே.  11 

 

 

பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி

யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்

வாசம்இ லாத மணிமந் திரயோகம்

தேசம் திகழும் திரிபுரை காணே.  12 

 

 

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு

பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்

பேணும் சிவனும் பிரமனும் மாயனும்

காணும் தலைவிநற் காரணி காணே.  13 

 

 

காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்

பூரண கும்ப விரேசம் பொருந்திய

நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த

ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.  14 

 

 

அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்

வந்த வழிமுறை மாறி உரை செய்யும்

செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு

நந்தி இதனை நவம் உரைத்தானே.  15 

 

 

உரைத்த நவசத்தி ஒன்று முடிய

நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்

பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி

நிரைத்து நியதி நியமம்செய் தானே.  16 

 

 

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற

ஏமத்து இருளற வீசும் இளங்கொடி

ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை

மேவித்து அமுதொடு மீண்டது காணே.  17 

 

 

காணும் இருதய மந்திர முங்கண்டு

பேணும் நமஎன்று பேசும் தலைமேலே

வேணு நடுவு மிகநின்ற ஆகுதி

பூணு நடுஎன்ற அந்தம் சிகையே.  18 

 

 

சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்

பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்

தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்

வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே.  19 

 

 

வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப்

பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து

நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே

பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே.  20 

 

 

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை

கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு

வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்

கூசியவிந்து வுடன் கொண்டு கூவே.  21 

 

 

கூவிய சீவன் பிராணன் முதலாகப்

பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை

மேவிய மாயை விரிசங்கு முத்திரை

தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.  22 

 

 

நின்ற வயிரவி நீலி நிசாசரி

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்

சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே

நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.  23 

 

 

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்

நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி

தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை

ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே.  24 

 

 

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி

ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்

பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்

ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே.  25 

 

 

கோலக் குழவி குலாய புருவத்தள்

நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்

ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி

மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.  26 

 

 

வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்

தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே

களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி

ஒளிப்படு வித்துஎன்னை உய்யக்கொண்டாளே.  27 

 

 

கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்

கண்டனள் எண்ணெண் கலையின் கண் மாலைகள்

விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்

தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே.  28 

 

 

தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை

மையலை நோக்கும் மனோன்மனி மங்கையைப்

பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்

வெய்ய பவம்இனி மேவகி லாவே.  29 

 

 

வேயன தோளி விரையுறு மென்மலர்

ஏய குழலி இளம்பிறை ஏந்திழை

தூய சடைமுடிச் சூலினி சுந்தரி

ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே.  30 

 

 

இனியதென் மூலை இருக்குங் குமரி

தனியொரு நாயகி தானே தலைவி

தனிப்படு வித்தனள் சார்வு படுத்து

நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.  31 

 

 

நாடிகள் மூன்று நடுஎழு ஞாளத்துக்

கூடி யிருந்த குமரி குலக்கன்னி

பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி

ஊடக மேவி உறங்குகின் றாளே.  32 

 

 

உறங்கும் அளவில் மனோன்மனி வந்து

கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்

பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு

உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே.  33 

 

 

உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து

அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்

சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே

அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே.  34 

 

 

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை

செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை

தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு

இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே.  35 

 

 

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை

காரியல் கோதையள் காரணி நாரணி

ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்

கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே.  36 

 

 

குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்

நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்

உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே

கலாவி இருந்த கலைத்தலை யாளே.  37 

 

 

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்

முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்

சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி

அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.  38 

 

 

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்

பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்

திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி

அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.  39 

 

 

ஆதி அனாதி அகாரணி காரணி

சோதிய சோதி சுகபர சந்தரி

மாது சமாதி மனோன்மனி மங்கலி

ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே.  40 

 

 

இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேவி

நயந்தனள் அங்கே நமசிவ என்னும்

அயன்தனை யோரும் பதமது பற்றும்

பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே.  41 

 

 

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்

முயற்றியின் முத்தி அருளும் முதல்வி

கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்

முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.  42 

 

 

உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்

பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது

வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்

கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.  43 

 

 

கன்னியுங் கன்னி அழிந்திலள்காதலி

துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி

பன்னிய நன்னூற் பகவரும் அங்குள

என்னேஇம் மாயை இருளது தானே.  44 

 

 

இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்

பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்

தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்

அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.  45 

 

 

ஆதி அனாதியும் ஆய பராசக்தி

பாதிபராபரை மேலுறை பைந்தொடி

மாது சமாதி மனோன்மனி மங்கலி

ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே.  46 

 

 

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை

ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்

சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்

ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே.  47 

 

 

ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை

நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்

தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை

மேவும் கிழத்தி வினைகடிந் தாளே.  48 

 

 

வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்

தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்

எனைஅடிமைக் கொண்ட ஏந்திழை ஈசன்

கணவனைக் காண அனாதியும் ஆமே.  49 

 

 

ஆதி அனாதி அகாரணி காரணி

வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற

சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்

பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே.  50 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சமணர் ஏவிய யானை வதம்
View Details
பொற்கிழி அளித்தல்
View Details
இந்திரன் பழிதீர்த்தல்
View Details