பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 02. திருஅம்பலச் சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை

இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி

இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று

இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.  1 

 

 

தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்

தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்

தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்

தான்ஒன்றி லேஒன்றும் அவ்வரன் தானே.  2 

 

 

அரகர என்ன அரியதொன்று இல்லை

அரகர என்ன அறிகிலர் மாந்தர்

அரகர என்ன அமரரும் ஆவர்

அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.  3 

 

 

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்

எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்

ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்

பட்டது மந்திரம் பான்மொழி யாலே.  4 

 

 

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்

ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்

விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்

கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே.  5 

 

 

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்

ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்

ஆலய மாக அறிகின்ற சூக்குமம்

ஆலய மாக அமர்ந்திருந் தானே.  6 

 

 

இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை

இருந்த அதனுள் இரேகை ஐந்தாக

இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக

இருந்த அறையொன்றில் எய்துமகாரமே.  7 

 

 

மகார நடுவே வளைத்திடும் சத்தியை

ஓகாரம் வளைத்திட்டும்பிளந்து ஏற்றி

அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்

நகார வகாரநற் காலது வாமே.  8 

 

 

நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்

ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது

நாடும் நடுவண் முகநம சிவாய

ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.  9 

 

 

ஆயும் சிவாய நமமசி வாயந

வாயு நமசிவா யயநம சிவாயந 

வாயுமே வாய நமசியெனு மந்திரம்

ஆயும் சிகாரம் தொட்டந்தத் தடைவிலே.  10 

 

 

அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின்

அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி

அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்

அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.  11 

 

 

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்

அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்

அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்

அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.  12 

 

 

சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்

சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்

சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து

ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.  13 

 

 

அதுவாம் அகார இகார உகாரம்

அதுவாம் எகாரம் ஓகாரமதஞ்சாம்

அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்

பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.  14 

 

 

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது

சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்

நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்

ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.  15 

 

 

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்

செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்

புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்

முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.  16 

 

 

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்

ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்

சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்

கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.  17 

 

 

அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே

பெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே

எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்

புண்ணிய வாளர் பொருளறி வார்களே.  18 

 

 

அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து

இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்

மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்

தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.  19 

 

 

அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது

கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை

கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்

சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.  20 

 

 

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்

அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்

அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்

அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.  21 

 

 

கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்

கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்

கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்

கூத்தனைக் காணும் குறியது வாமே.  22 

 

 

அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே 

அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத்து ஓதினால்

அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை

அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே.  23 

 

 

தானே அளித்திடும் தையலை நோக்கினால்

தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்

தானே அளித்த மகாரத்தை ஓதிடத்

தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே.  24 

 

 

கல்லொளி யேயென நின்ற வடதிசை

கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்

கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்

கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.  25 

 

 

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்

தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்

தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்

தானே எழுந்த மறையவன் ஆமே.  26 

 

 

மறைய வனாக மதித்த பிறவி

மறையவ னாக மதித்திடக் காண்பர்

மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற

மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே.  27 

 

 

ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும்

ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்

ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின்

ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.  28 

 

 

அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்

செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்

ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்

பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.  29 

 

 

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்

வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்

துரந்திடு மந்திரம் சூழ்பகை போக

உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே.  30 

 

 

ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை

நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை

ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்

மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.  31 

 

 

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்

பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்

ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்

யாகொன்றி நிற்கும் பராபரன் தானே.  32 

 

 

பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்

பரமாய நவசிம பார்க்கில் மவயநசி 

பரமாய சியநம வாம்பரத்து ஓதில்

பரமாய வாசி மயநமாய் நின்றே.  33 

 

 

நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்

நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்

நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்

நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.  34 

 

 

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்

மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்

கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்

குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.  35 

 

 

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல

கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து

கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்

கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.  36 

 

 

வெளியில் இரேகை இரேகையி லத்தலை

சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி

நெளிதரும் கால்கொம்பு நேர்விந்து நாதம்

தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.  37 

 

 

அகார உகார சிகார நடுவாய்

வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்

சிகார முடனே சிவன்சிந்தை செய்ய

ஒகார முதல்வன் உவந்துநின் றானே.  38 

 

 

அற்ற இடத்தே அகாரமது ஆவது

உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்

செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்

குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே.  39 

 

 

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்

உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்

மவ்வென்று என்னுள்ளே வழிபட்ட நந்தியை

எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.  40 

 

 

நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது

வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை

யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்கள்

ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.  41 

 

 

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்

மாலை நடுவுற ஐம்பதும் ஆவன

மேலை நடுவுற வேதம் விளம்பிய

மூலம் நடுவுற முத்திதந் தானே.  42 

 

 

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று

பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை

ஓவிய ராலும் அறியவொண் ணாதது

தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.  43 

 

 

அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்

அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்

அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்

அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.  44 

 

 

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது

உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்

சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்

அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே.  45 

 

 

சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற

ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன

பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்

ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.  46 

 

 

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்

பெருகு துடியிடை பேணிய விந்து

மருவி யகார சிகார நடுவாய்

உருவிட ஊறும் உறுமந் திரமே.  47 

 

 

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்

சந்திர னோடே தலைப்படு மாயிடில்

அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்

அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.  48 

 

 

ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்

ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்

வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு

ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே.  49 

 

 

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்

ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்

சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள

நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.  50 

 

 

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்

பந்தத் தலைவி பதினாறு கலையதாம்

சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்

அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.  51 

 

 

ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்

ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்

ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்

ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.  52 

 

 

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்

அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்

அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்

அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.  53 

 

 

வீழ்ந்தெழ  லாம்விகிர் தன்திரு நாமத்தைச்

சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்

சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்

போந்திடும் என்னும் புரிசடை யோனே.  54 

 

 

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்

பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்

விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ

எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.  55 

 

 

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்

ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்

ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்

ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.  56 

 

 

வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்

நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்

சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து

ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே.  57 

 

 

நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது

நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது

நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு 

நாலாம் எழுத்தது நன்னெறி தானே.  58 

 

 

இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி

நயந்தனள் அங்கே நமசிவ என்னும்

பயந்தனை யோரும் பதமது பற்றும்

பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே.  59 

 

 

ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை

ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்

நாம நமசிவ என்றிருப் பாருக்கு

நேமத் தலைவி நிலவிநின் றாளே.  60 

 

 

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்

இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர

நட்டமது ஆடும் நடுவே நிலயங்கொண்டு

அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே.  61 

 

 

அகாரம் உயிரே உகாரம் பரமே

மகார மலமாய் வருமுப் பதத்தில்

சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்

யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 62

 

 

நகார மகார சிகார நடுவாய்

வகாரம் இரண்டும் வளியுடன் கூடி

ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க

மகார முதல்வன் மனத்தகத் தானே.  63 

 

 

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன

அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன

அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே

அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.  64 

 

 

ஐந்து கலையில் அகராதி தன்னிலே

வந்த நகராதி மாற்றி மகராதி

நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்

சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.  65 

 

 

மருவும் சிவாயமே மன்னும் உயிரும்

அருமந்த போகமும் ஞானமும் ஆகும்

தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே

அருள்தங்கி அச்சிவம் ஆவது வீடே.  66 

 

 

அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்

நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்

வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை

தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே.  67 

 

 

சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்

சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்

சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்

சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே.  68 

 

 

சிகார வகார யகார முடனே

நகார மகார நடுவுற நாடி

ஓகார முடனே ஒருகால் உரைக்க

மகார முதல்வன் மதித்துநின் றானே.  69 

 

 

நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்

அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை

சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்

தம்முதல் ஆகும் சதாசிவந் தானே.  70 

 

 

நவமும் சிவமும் உயிர்பர மாகும்

தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்

சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச்

சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.  71 

 

 

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி

நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து

ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவர்கள்

தேடி அதனைத் தெளிந்தறி யீரே.  72 

 

 

எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்

பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.  73 

 

 

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி

இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்

வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்

சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.  74 

 

 

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்

ஆனஇம் மூவரோடு ஆற்றவ ராதிகள்

ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்

சேனையும் செய்சிவ சக்கரந் தானே.  75 

 

 

பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்

விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்

எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்

ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே  76 

 

 

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.  77 

 

 

வித்தாம் செகமய மாக வரைகீறி

நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்

உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும்

பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே.  78 

 

 

கண்டெழுந் தேன்கம லம்மலர் உள்ளிடை

கொண்டொழிந்தேன் உடன் கூடிய காலத்துப்

பண்டழி யாத பதிவழி யேசென்று

நண்பழி யாமே நமவென வாமே.  79 

 

 

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று

எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்

நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்

கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.  80 

 

 

ஆறெழுத்தாவது ஆறு மந்திரங்கள்

ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்

சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள

பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. 81

 

 

எட்டினில் எட்டறை யிட்டோர றையிலே

கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்

சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு

மட்டும் உயிர்கட்கு உமாபதி யானுண்டே.  82 

 

 

நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே

அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு

உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்

உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே.  83 

 

 

நின்ற அரசம் பலகைமேல் நேராக

ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்

துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்

தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.  84 

 

 

கரண விறளிப் பலகை யமன்திசை

மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு

வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை

முரணிற் புதைத்திட மோகன மாகுமே.  85 

 

 

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்

பாங்கு படவே பலாசப் பலகையில்

காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு

ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே.  86 

 

 

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்

பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து

முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட

அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.  87 

 

 

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி

ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு

வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு

ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே.  88 

 

 

எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு

எண்ணாப் பொன்னொளி எழுவெள்ளி பூசிடா

வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி

எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே.  89 

 

திருச்சிற்றம்பலம்