முதல்-திருமுறை

094 நீல மாமிடற்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : ஆலவாய் (மதுரை)

திருச்சிற்றம்பலம்

 

நீல மாமிடற், றால வாயிலான்

பால தாயினார், ஞாலம் ஆள்வரே.  1 

 

ஞாலம் ஏழுமாம், ஆல வாயிலார்

சீல மேசொலீர், காலன் வீடவே.  2 

 

ஆல நீழலார், ஆல வாயிலார்

கால காலனார், பால தாமினே.  3 

 

அந்த மில்புகழ், எந்தை யாலவாய்

பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.  4 

 

ஆட லேற்றினான், கூட லாலவாய்

பாடி யேமனம், நாடி வாழ்மினே.  5 

 

அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை

எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.  6 

 

அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்

நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.  7 

 

அரக்க னார்வலி1, நெருக்கன் ஆலவாய்

உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே. 8 

 

அருவன் ஆலவாய், மருவி னான்றனை

இருவ ரேத்தநின், றுருவம் ஓங்குமே.  9 

 

ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்

தேர மண்செற்ற, வீர னென்பரே.  10 

 

அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்

முடிவி லின்தமிழ், செடிகள் நீக்குமே. 11

திருச்சிற்றம்பலம்