பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 06. பிரத்தியாகாரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்

கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்

பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை

இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே  1 

 

 

நாபிக்குக் கீழே பன்னிரெண் டங்குலந்

தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்

தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்

கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே  2 

 

 

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற

பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற

கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்

ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே  3 

 

 

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்

நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்

மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்

தேகத்துக் கென்றுஞ்சிதைவில்லை யாமே  4 

 

 

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்

கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்

நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்

ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே  5 

 

 

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு

மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு

வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு

காலத்தை வெல்லுங் கருத்திது தானே  6 

 

 

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே

கருவிடும் வாசற் கிருவிரற் கீழே

உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்

கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே  7 

 

 

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்

பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்

கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்

பிரத்தியா காரப் பெருமைய தாமே  8 

 

 

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்

திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்

உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே

புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே  9 

 

 

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்

வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்

சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்

அறிப்புறு காட்சி அமரரு மாமே  10 

 

திருச்சிற்றம்பலம்