பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 04. ஆதனம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்

அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்

சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்

தங்க இருப்பத் தலைவனு மாமே  1 

 

 

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்

டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்

சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்

பார்திகழ் பத்மா சனமென லாகுமே  2 

 

 

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து

அரிய முழந்தாளி லங்கையை நீட்டி

உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்

பரிசு பெறுமது பத்திரா சனமே  3 

 

 

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு

முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்

தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்

குக்குட ஆசனங் கொள்ளலு மாமே  4 

 

 

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி

ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்

கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்

சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே  5 

 

 

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு

1முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே 6

 

திருச்சிற்றம்பலம்