முதல்-திருமுறை

092 வாசி தீரவே

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : திருவிருக்குக்குறள்

திருச்சிற்றம்பலம்

 

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே.  1 

 

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே.  2 

 

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.  3 

 

நீறு பூசினீர், ஏற தேறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே.  4 

 

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.  5 

 

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.  6 

 

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.  7 

 

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.  8 

 

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.  9 

 

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.  10 

 

காழி மாநகர், வாழி சம்பந்தன்

வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 11

திருச்சிற்றம்பலம்