பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 22. குரு நிந்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்

உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்

கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்

பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.  1 

 

 

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய

சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்

ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்

வாரிடைக் கிருமியாய்1 மாய்வர் மண்ணிலே. 2

 

 

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்

சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்

அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்1

சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே  3 

 

 

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு 

வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.  4 

 

 

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்

வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்

நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.  5 

 

 

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.  6 

 

 

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு

வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்

கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்

கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.  7 

 

திருச்சிற்றம்பலம்