பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 20. அதோமுக தெரிசனம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று

வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல

அம்பவள மேனி அறுமுகன் போயவர்

தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.  1 

 

 

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்

கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை

உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்

வெண்டலை மாலை விரிசடை யோற்கே.  2 

 

 

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்

பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்

மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்

மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.  3 

 

 

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய

செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்

முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்

அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.  4 

 

 

அதோமுகம் கீழண்ட மான புராணன்

அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்

சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்

அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.  5 

 

 

அதோமுகம் மாமல ராயது கேளும்

அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து

அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி

அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.  6 

 

திருச்சிற்றம்பலம்