பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 08. அடிமுடி தேடல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்

பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே

பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க

அரனடி தேடி அரற்றுகின் றாரே.  1 

 

 

ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்

தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்

வானே ழுலகுறும் மாமணி கண்டனை

யானே அறிந்தேன் அவனாண்மை யாலே. 2 

 

 

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்

சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்

தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்

தாண்முழு தண்டமு மாகிநின் றானே.  3 

 

 

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்

அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது

சென்றார் இருவர் திருமுடி மேற்செல

நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.  4 

 

 

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்

மூவடி தாவென் றானும் முனிவரும்

பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்

தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.  5 

 

 

தானக் கமலத் திருந்த சதுமுகன்

தானக் கருங் கடல் வாழித்1 தலைவனும்

ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற

தானப் பெரும்பொருள் தன்மைய தாமே.  6 

 

 

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்

மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்

டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்

கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.  7 

 

 

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்

ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்

ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்தன்

தாள்கொடுத் தானடி சாரகி லாரே.  8 

 

 

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு

வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்

வீழித் தலைநீர் விதித்தது காவெனும்

ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.  9

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பெருமிழலைக் குறும்ப நாயனார்
View Details
பட்டினத்தார்
View Details
நந்தீசர்
View Details