பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 03. இலிங்க புராணம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி

முடிசேர் மலைமக னார்மக ளாகித்

திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்

படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.  1 

 

 

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை

அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா

புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்

பரிவொடு நின்று பரிசறி வானே.  2 

 

 

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்

ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்

ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி

வாழி பிரமற்கும்1 வாள்கொடுத் தானே.  3 

 

 

தாங்கி இருபது தோளுந் தடவரை

ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி

ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்

நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.  4 

 

 

உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி

அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை

செறுவகை செய்து சிதைப்ப முனிந்து

மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.  5 

 

 

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்

வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று

நாடி இறைவா நமஎன்று கும்பிட

ஈடில் புகழோன் எழுகவென் றானே.  6 

 

திருச்சிற்றம்பலம்