பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 18. அன்புடைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.  1 

 

 

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்

மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்

பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.  2 

 

 

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்

அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி

என்போல் மணியினை எய்தஒண் ணாதே.  3 

 

 

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

ஈரம் உடையவர் காண்பார் இணையடி

பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்

கோர நெறிகொடு கொங்குபுக் காரே.  4 

 

 

என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்

முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்

பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்

தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே.  5 

 

 

தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்

வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்

தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்

தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.  6 

 

 

முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை

அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்

வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்

அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.  7 

 

 

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி

இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்

அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்

விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.  8 

 

 

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்

வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்

இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று

நச்சியே அண்ணலை நாடுகி லாரே.  9 

 

 

அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்

முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்

அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்