பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 17. அறஞ்செயான் திறம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன

ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்

பட்டிப் பதகர் பயன்அறி யாரே.  1 

 

 

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின

கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்

பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை

அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.  2 

 

 

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்

திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்

புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு

மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.  3 

 

 

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்

உருமிடி நாகம் உரோணி கழலை

தருமம்செய் வார்பக்கல் சாரகி லாவே.  4 

 

 

பரவப் படுவான் பரமனை ஏத்தீர்

இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்

கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்

நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.  5 

 

 

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்

கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்

மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு

வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.  6 

 

 

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்

துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்

மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி

மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.  7 

 

 

இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையி னாலே முடிந்தது

இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்

அன்பிலார் சிந்தை அறமறி யாரே.  8 

 

 

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்

நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்

இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்

படுவது செய்யின் பசுவது வாமே.  9 

 

 

செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்

புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்

இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்

வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சங்கப் பலகையளித்தல்
View Details
ஸ்ரீ வல்லப சித்தர் (சுந்தரானந்ததேவர்)
View Details
சிறுத்தொண்ட நாயனார்
View Details