அ௫ளியவர் : திருமூலர்
திருமுறை : பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே. 1
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 2
திருச்சிற்றம்பலம்