பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 05. உயிர் நிலையாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்

இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்

பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்

அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.  1 

 

 

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது

ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்

ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்

ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  2 

 

 

மத்தளி** ஒன்றுள தாளம் இரண்டுள

அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்

அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்

மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 1

 

 

மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள

அத்துள்ளே வாழும் அமைச்சும் அஞ்சுள்ளன

அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்

மத்தளி மண்ணாய் மயங்கியவாறே. 2

 

 

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள

அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள

அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்

மத்தளி மண்ணாய் மயங்கியவாறே.  3 

 

 

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை

வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை

வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்

தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.  4 

 

 

சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்

அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்

நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்

பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.  5 

 

 

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை

பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை

கூறும் கருமயிர் வெண்மயி ராவது

ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.  6 

 

 

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி

அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி

அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி

விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.  7 

 

 

இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்

உண்பது வாச மதுபோல் உயிர்நிலை

இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி

கண்புற நின்ற கருத்துள்நில் லானே.  8 

 

 

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்

போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்

நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்

ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.  9 

 

 

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்

வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்

செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு

தவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே.  10

 

திருச்சிற்றம்பலம்