பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 03. செல்வம் நிலையாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அருளும் அரசனும் ஆனையும் தேரும்

பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்

தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்

மருளும் பினையவன் மாதவ மன்றே.  1 

 

 

இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும்

துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா

மயக்கற நாடுமின் வானவர் கோனைப்

பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.  2 

 

 

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு

என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்

உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.  3 

 

 

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்

கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்

ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.  4 

 

 

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.  5 

 

 

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே

கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்

அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்

சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.  6 

 

 

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்

தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள்

மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்

கூவும் துணையொன்று கூடலு மாமே.  7 

 

 

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை

பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது

நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்

காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.  8 

 

 

உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது

அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்

விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்

சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.  9

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்
View Details
முருக நாயனார்
View Details
ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு
View Details