பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 06. அவையடக்கம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை

யாரறி வார்இந்த அகலமும் நீளமும்

பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேரறி யாமை விளம்புகின் றேனே.  1 

 

 

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்

ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்

நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்

தேடவல் லார்நெறி தேடகில் லேனே.  2 

 

 

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்

பின்னை உலகம் படைத்த பிரமனும்

உன்னும் அவனை உணரலு மாமே.  3 

 

 

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்

ஒத்துடன் வேறா இருந்து துதிசெயும்

பத்திமை யால் இப் பயனறி யாரே.  4 

 

திருச்சிற்றம்பலம்