பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 04. குரு பாரம்பரியம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே.  1 

 

 

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  2 

 

 

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு

இந்த எழுவரும் என்வழி யாமே.  3 

 

 

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்

நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.  4 

 

 

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்டகி லானே.  5 

 

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்

செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே

அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.  6

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

அகப்பேய்ச் சித்தர்
View Details
விறகு விற்றல்
View Details
ஸ்ரீ பெத்த நாராயண சித்தர்
View Details