பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 03. ஆகமச் சிறப்பு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்

அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.  1 

 

 

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே.  2 

 

 

பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்

கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க

பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.  3 

 

 

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி

தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.  4 

 

 

பரனாய் பராபரம் காட்டி உலகில்

தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்

தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி

உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.  5 

 

 

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற

நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.  6 

 

 

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்

உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்

மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்

துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.  7 

 

 

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.  8 

 

 

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று

ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து

ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.  9 

 

 

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்