பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 02. வேதச் சிறப்பு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.  1 

 

 

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்

வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.  2 

 

 

இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே

உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி

வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்

கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.  3 

 

 

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்

பெருநெறி யாய பிரானை நினைந்து

குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்

ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.  4 

 

 

ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்

கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை

வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்

பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.  5 

 

 

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்

ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்

வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்

ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே.  6 

 

திருச்சிற்றம்பலம்