ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

014 திருவருள் புரிந்தாள்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : பூவணம்

திருச்சிற்றம்பலம்

 

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்

  சிறியனுக்(கு) இனியது காட்டிப்

பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்

  பெருமையிற் பெரியதொன் றுளதே

மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி

  வரைவளங் கவர்ந்திழி வைகைப்*

பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்

  பூவணங் கோயில்கொண் டாயே.   1 

 

 

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்

  பன்னெடுங் காலம்நிற் காண்பான்

ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த

  எளிமையை என்றும் நான் மறக்கேன்

தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்

  தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்

பூம்பணைச் சோலை ஆவண வீதிப்

  பூவணங் கோயில்கொண் டாயே.  2 

 

 

கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில்

  கையினிற் கட்டிய கயிற்றால்

இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள்

  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே;

விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்

  வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த

புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்

  பூவணங் கோயில்கொண் டாயே.  3 

 

 

கண்ணியல் மணியின் சூழல்புக்(கு) அங்கே

  கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்

நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை

  நுண்ணிமை இறந்தமை அறிவன்

மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்

  வண்டினம் பாடநின் றாடும்

புண்ணிய மகளிர் ஆவண வீதிப்

  பூவணங் கோயில்கொண் டாயே.  4 

 

 

கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்

  கள்ளரை மெள்ளவே துரந்துன்

அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்

  அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்

நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க

  நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்

புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்

  பூவணங் கோயில் கொண் டாயே.  5 

 

 

செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன்

  சேவடி பார்த்திருந்(து) அலச

எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார்

  என்னுடை அடிமைதான் யாதே

அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள

  அரிவையர் அவிழ்குழல் கரும்பு

பொம்மென முரலும் ஆவண வீதிப்

  பூவணங் கோயில்கொண் டாயே.  6 

 

 

சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச்

  சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று

கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்

  கருணையிற் பெரியதொன் றுளதே

மின்னவில் கனக மாளிகை வாய்தல்

  விளங்கிளம் பிறைதவழ் மாடம்

பொன்னவில் புரிசை ஆவண வீதிப்

  பூவணங் கோயில்கொண் டாயே.  7 

 

 

பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட

  புனிதனை வனிதைபா கனை வெண்

கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்

  குழகனை அழகெலாம் நிறைந்த

தீவணன் தன்னைச் செழுமறை தெரியும்

  திகழ்கரு வூரனேன் உரைத்த

பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்

  பரமனது உருவமா குவரே. 8

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஸ்ரீ பெத்த நாராயண சித்தர்
View Details
தண்டியடிகள் நாயனார்
View Details
நேச நாயனார்
View Details