ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

012 நீரோங்கி வளர்கமல

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : திரைலோக்கிய சுந்தரம்

திருச்சிற்றம்பலம்

 

நீரோங்கி வளர்கமல 

  நீர்பொருந்தாந் தன்மையன்றே

ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) 

  அருவினையேன் திறம்மறந்தின்(று)

ஊரோங்கும் பழிபாரா(து) 

  உன்பாலே விழுந்தொழிந்தேன்

சீரோங்கும் பொழிற்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே !  1 

 

 

நையாத மனத்தினனை 

  நைவிப்பான் இத்தெருவே

ஐயா !நீ உலாப்போந்த 

  அன்றுமுதல் இன்றுவரை

கையாரத் தொழுதுஅருவி 

  கண்ணாரச் சொரிந்தாலும்

செய்யாயோ அருள்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே !  2 

 

 

அம்பளிங்கு பகலோன்பால் 

  அடைப்பற்றாய் இவள்மனத்தில்

முன்பளிந்த காதலும்நின் 

  முகத்தோன்ற விளங்கிற்றால்

வம்பளிந்த கனியே !

  என் மருந்தே ! நல் வளர்முக்கண்

செம்பளிங்கே ! பொழிற்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே !  3 

 

 

மைஞ்ஞின்ற குழலாள்தன் 

  மனந்தரவும் வளைதாராது

இஞ்ஞின்ற கோவணவன் 

  இவன்செய்தது யார்செய்தார்

மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் 

  மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு

செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே.  4 

 

 

நீவாரா(து) ஒழிந்தாலும் 

  நின்பாலே விழுந்தேழை

கோவாத மணிமுத்தும் 

  குவளைமலர் சொரிந்தனவால்;

ஆவா !என்று அருள் புரியாய் 

  அமரர்கணம் தொழுதேத்தும்

தேவா !தென் பொழிற்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே.  5 

 

 

முழுவதும்நீ ஆயினும் இம் 

  மொய்குழலாள் மெய்ம்முழுதும்

பழுதெனவே நினைந்தோராள் 

  பயில்வதும்நின் ஒரு நாமம்

அழுவதும்நின் திறம்நினைந்தே 

  அதுவன்றோ பெறும்பேறு

செழுமதில்சூழ் பொழிற்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே.  6 

 

 

தன்சோதி எழுமேனித் 

  தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்

உன்சோதி எழில்காண்பான் 

  ஒலிடவும் உருக்காட்டாய்

துஞ்சாகண் இவளுடைய 

  துயர்தீரு மாறுரையாய்

செஞ்சாலி வயற்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே.  7 

 

 

அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) 

  ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்

நிரம்பாத பிறைதூவும் 

  நெருப்பொடுநின் கையிலியாழ்

நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் 

  நளிர்புரிசைக் குளிர்வனம்பா

திரம்போது சொரிகோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே.  8 

 

 

ஆறாத பேரன்பின் 

  அவருள்ளம் குடிகொண்டு

வேறாகப் பலர்சூழ 

  வீற்றிருத்தி அதுகொண்டு

வீறாடி இவள்உன்னைப் 

  பொதுநீப்பான் விரைந்தின்னம்

தேறாள்தென் பொழிற்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே.  9 

 

 

சரிந்ததுகில் தளர்ந்தஇடை 

  அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை

இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) 

  இரங்காய்எம் பெருமானே !

முரிந்தநடை மடந்தையர் தம் 

  முழங்கொலியும் வழங்கொலியும்

திருந்துவிழ(வு) அணிகோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே.  10 

 

 

ஆரணத்தேன் பருகிஅருந் 

  தமிழ்மாலை கமழவரும்

காரணத்தின் நிலைபெற்ற 

  கருவூரன் தமிழ்மாலை

பூரணத்தால் ஈரைந்தும் 

  போற்றிசைப்பார் காந்தாரம்

சீரணைத்த பொழிற்கோடைத் 

  திரைலோக்கிய சுந்தரனே. 11

 

திருச்சிற்றம்பலம்