எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

025 பரத்தையிற் பிரிவு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே

எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர்

கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம்

படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. 1

 

 

சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்ச்சுருங் கும்மருங்குற்

பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க்

கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும்

அரும்பொறை யாகுமென் னாவியுந் தேய்வுற் றழிகின்றதே. 2

 

 

அப்புற்ற சென்னியன் தில்லை யுறாரி னவர்உறுநோய்

ஒப்புற் றெழில்நல மூரன் கவரஉள் ளும்புறம்பும்

வெப்புற்று வெய்துயிர்ப் புற்றத்தம் மெல்லணை யேதுணையாச்

செப்புற்ற கொங்கையர் யாவர்கொ லாருயிர் தேய்பவரே. 3

 

 

தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்தில்லை சேரலர்போல்

ஆவா கனவும் இழந்தேன் நனவென் றமளியின்மேற்

பூவார் அகலம்வந் தூரன் தரப்புலம் பாய்நலம்பாய்

பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேனரும் பாவியனே. 4

 

 

செய்ம்முக நீலமலர் தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்

கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப்

பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன் றென்றிலையே

நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. 5

 

 

பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும்

ஆங்கு வளைத்துவைத் தாரேனுங் கொள்கநள் ளார்அரணந்

தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய்

ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோமன் உறாவரையே. 6

 

 

தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா

தெவஞ்செய்து நின்றினி யின்றுனை நோவதென் அத்தன்முத்தன்

சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்

நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே. 7

 

 

தணியுறப் பொங்குமிக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்

பிணியுறப் பேதைசென் றின்றெய்து மால்அர வும்பிறையும்

அணியுறக் கொண்டவன் தில்லைத் தொல்லாயநல் லார்கண்முன்னே

பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. 8

 

 

இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து

குரவணை யுங்குழல் இங்கிவ ளால்இக் குறியறிவித்

தரவணை யுஞ்சடை யோன்தில்லை யூரனை யாங்கொருத்தி

தரவணை யும்பரி சாயின வாறுநந் தன்மைகளே. 9

 

 

சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்

சிவந்தஅம் தாளணி ஊரற் குலகிய லாறுரைப்பான்

சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற்

சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே. 10

 

 

குராப்பயில் கூழை யிவளின்மிக் கம்பலத் தான்குழையாம்

அராப்பயில் நுண்ணிடை யாரடங் காரெவ ரேயினிப்பண்

டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று

கராப்பயில் பூம்புன லூரன் புகுமிக் கடிமனைக்கே. 11

 

 

வந்தான் வயலணி யூரனெனச் சினவாள் மலர்க்கண்

செந்தா மரைச்செவ்வி சென்றசிற் றம்பல வன்னருளான்

முந்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவிற்

பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. 12

 

 

வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற்

செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலஞ்சூழ்

மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண் டூதவிண் தோய்பிறையோ

டெல்லிகைப் போதியல் வேல்வயலூரற் கெதிர் கொண்டதே. 13

 

 

புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னியுய்ப்பக்

கலவிக் கடலுட் கலிங்கஞ்சென் றெய்திக் கதிர்கொண்முத்தம்

நிலவி நிறைமது ஆர்ந்தம் பலத்துநின் றோனருள்போன்

றுலவிய லாத்தனஞ் சென்றெய்த லாயின வூரனுக்கே. 14

 

 

செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம்

மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்

வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழந்து புலந்துநைந்தாள்

இவ்வா றருள்பிறர்க் காகுமென நினைந் தின்னகையே. 15

 

 

மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன் னன்ஒருவன்

பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த

அலரைப் பொறாதன் றழல்விழித் தோனம்பலம் வணங்காக்

கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே. 16

 

 

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து

வல்லைப் பொலிவொடு வந்தமை யால்நின்று வான்வழுத்துந்

தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின்

மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே. 17

 

 

சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல்செய்வான்

தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர்செம்ம லூரன்திண்டோள்

மான்முதிர் நோக்கின்நல் லார்மகி ழத்தில்லை யானருளே

போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. 18

 

 

சேயே யெனமன்னு தீம்புன லூரன்திண் டோளிணைகள்

தோயீர் புணர்தவந் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகொலந்

தீயே யெனமன்னு சிற்றம் பலவர்தில் லைந்நகர்வாய்

வீயே யெனஅடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே. 19

 

 

அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்

அரமங் கையரென வந்தணு கும்மவ ளன்றுகிராற்

சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப்

புரமங் கையரின்நை யாதைய காத்துநம் பொற்பரையே. 20

 

 

கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்

அனலூர் சடையோ னருள்பெற் றவரின் அமரப்புல்லும்

மினலூர் நகையவர் தம்பா லருள்விலக் காவிடின்யான்

புனலூ ரனைப் பிரியும்புன லூர்கணப் பூங்கொடியே. 21

 

 

இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றினென் னெங்கையங்கைச்

சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்டோள்

பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியினோ

டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே. 22

 

 

வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன

தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்

றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்

யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே. 23

 

 

விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த

திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்

பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ

அறலியல் கூழைநல் லாய்தமி யோமை யறிந்திலரே. 24

 

 

திக்கின் இலங்குதிண் டோளிறை தில்லைச்சிற் றம்பலத்துக்

கொக்கின் இறகத ணிந்துநின் றாடிதென் கூடலன்ன

அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்

தக்கின் றிருந்திலன் நின்றசெவ் வேலெந் தனிவள்ளலே. 25

 

 

அன்புடை நெஞ்சத் திவள்பே துறஅம் பலத்தடியார்

என்பிடை வந்தமிழ் தூறநின் றாடி யிருஞ்சுழியல்

தன்பெடை நையத் தகவழிந் தன்னஞ்சலஞ் சலத்தின்

வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே. 26

 

 

அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை

மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தாரவரென்

நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவுகனவு முண்டேற்

பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே. 27

 

 

தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்சிற் றம்பலத்தான்

கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள்

உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி யுள்ளுதொறும்

பள்ளம் புகும்புனல் போன்றகத் தேவரும் பான்மையளே. 28

 

 

தேன்வண் டுறைதரு கொன்றையன் சிற்றம் பலம்வழுத்தும்

வான்வண் டுறைதரு வாய்மையன் மன்னு குதலையின்வா

யான்வண் டுறைதரு மாலமு தன்னவன் வந்தணையான்

நான்வண் டுறைதரு கொங்கைஎவ் வாறுகொ னண்ணுவதே. 29

 

 

கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால்

மயல்வந்த வாட்டம் அகற்றா விரதமென் மாமதியின்

அயல்வந்த ஆடர வாடவைத் தோனம் பலம்நிலவு

புயல்வந்த மாமதிற் றில்லைநன் னாட்டுப் பொலிபவரே. 30

 

 

கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோளிழித்தால்

போற்றான் செறியிருட் பொக்கமெண் ணீர்கன் றகன்றபுனிற்

றீற்றா வெனநீர் வருவது பண்டின்றெம் மீசர்தில்லைத்

தேற்றார் கொடிநெடு வீதியிற் போதிர்அத் தேர்மிசையே. 31

 

 

வியந்தலை நீர்வையம் மெய்யே யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்

வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன்

புயந்தலை தீரப் புலியூர் அரனிருக் கும்பொருப்பிற்

கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. 32

 

 

தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்

ஓவியங் கண்டன்ன வொண்ணுத லாள்தனக் கோகையுய்ப்பான்

மேவியங் கண்டனை யோவந் தனனென வெய்துயிர்த்துக்

காவியங் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. 33

 

 

உடைமணி கட்டிச் சிறுதே ருருட்டி யுலாத்தருமிந்

நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மாலறியா

விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்னங்

கடைமணி வாள்நகை யாயின்று கண்டனர் காதலரே. 34

 

 

மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கூரர்நின்வாய்

மெய்கொண்ட அன்பின ரென்பதென் விள்ளா அருள்பெரியர்

வைகொண்ட வூசிகொல் சேரியின் விற்றெம்இல் வண்ணவண்ணப்

பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. 35

 

 

கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்

வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக்

கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று

பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே. 36

 

 

மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலுந்

தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து

முத்தம் பயக்குங் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னங்

கித்தக் கருங்குவளைச் செவ்வி யோடிக் கெழுமினவே. 37

 

 

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை யாட்டுவந்த

தவலங் கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச்

சுவலங் கிருந்தநந் தோன்றல் துணையெனத் தோன்றுதலால்

அவலங் களைந்து பணிசெயற் பாலை யரசனுக்கே. 38

 

 

சேறான் திகழ்வயற் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்

வேறான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த

பாறான் திகழும் பரிசினம் மேவும் படிறுவவேம்

காறான் தொடல்தொட ரேல்விடு தீண்டலெங் கைத்தலமே. 39

 

 

செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர்

பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவியெற்கு

வந்தார் பரிசுமன் றாய்நிற்கு மாறென் வளமனையிற்

கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே. 40

 

 

மின்றுன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்

சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்தென் னம்பொதியில்

நன்றுஞ் சிறியவ ரில்லெம தில்லம்நல் லூரமன்னோ

இன்றுன் திருவரு ளித்துணை சாலுமன் னெங்களுக்கே. 41

 

 

செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக்

கழுமிய கூத்தர் கடிபொழி லேழினும் வாழியரோ

விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர்

விழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே. 42

 

 

திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்

இருந்தேன் உயவந் திணைமலர்க் கண்ணின்இன் நோக்கருளிப்

பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித் தாண்டநம் பெண்ணமிழ்தம்

வருந்தே லதுவன் றிதுவோ வருவதொர் வஞ்சனையே. 43

 

 

இயன்மன்னும் அன்புதந் தார்க்கென் நிலையிமை யோரிறைஞ்சுஞ்

செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம் பலவர்தென் னம்பொதியிற்

புயன்மன்னு குன்றிற்பொரு வேல்துணையாப் பொம்மென் னிருள்வாய்

அயன்மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே. 44

 

 

கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்

தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித் தானிமை யோரிறைஞ்சும்

மதுத்தங் கியகொன்றை வார்சடை யீசர்வண் தில்லைநல்லார்

பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா எம்மைப் பூசிப்பதே. 45

 

 

சிலைமலி வாணுத லெங்கைய தாகமெனச் செழும்பூண்

மலைமலி மார்பினு தைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை

உலைமலி வேற்படை யூரனிற் கள்வரில் என்னவுன்னிக்

கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. 46

 

 

ஆறூர் சடைமுடி அம்பலத் தண்டரண் டம்பெறினும்

மாறூர் மழவிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு

நீறூர் கொடுநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச்

சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற் சிறுதுயிலே. 47

 

 

ஐயுற வாய்நம் அகன்கடைக் கண்டுவண் டேருருட்டும்

மையுறு வாட்கண் மழவைத் தழுவமற் றுன்மகனே

மெய்யுற வாம்இதுன் னில்லே வருகென வெள்கிச்சென்றாள்

கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. 48

 

 

காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்

சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்

தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர்

ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கும் ஊதியமே. 49

 

 

திருச்சிற்றம்பலம்