அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென் றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன் இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின ராகுவ ரேந்திழையே. 1
வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. 2
கற்பா மதிற்றில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல் லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. 3
பிரியா மையுமுயி ரொன்றா வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப் பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி யென்னாம் புகல்வதுவே. 4
திருச்சிற்றம்பலம்