எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

019 மணஞ்சிறப்புரைத்தல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்

முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்

அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற்

புரைசந்த மேகலை யாய்துயர் தீரப்புகுந்து நின்றே.  1

 

 

இருந்துதி யென்வயிற் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும்

மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல்

இருந்து திவண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால்

அருந்துதி காணு மளவுஞ் சிலம்பன் அருந்தழையே.  2

 

 

சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற்

காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த

வேரியுஞ் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பரன்னே

காரியல் கண்டவர்வண் தில்லை வணங்குமெங் காவலரே. 3

 

 

தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரிற்

கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென்

தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள்

வண்டின மேவுங் குழலா ளயல்மன்னும் இவ்வயலே. 4

 

 

பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போலிடை யெனப்பூண்

இட்டணி யான்தவி சின்மல ரன்றி மிதிப்பக்கொடான்

மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக்

கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. 5

 

 

தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்

தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத்

தெய்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான்

பெளவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே. 6

 

 

சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப்

பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்

கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும்

இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவ னீர்ங்களிறே. 7

 

 

மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே

றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனாந்

தென்னவ னேத்துசிற் றம்பலந் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்

முன்னவன் மூலவன் னாளும்மற் றோர்தெய்வ முன்னலளே. 8

 

 

ஆனந்த வெள்ளத் தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண்

டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர்

ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின்

ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநலமே.  9

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details
சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details
விறகு விற்றல்
View Details