எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

018 வரைபொருட்பிரிதல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும் நின்குலத் திற்கும்வந்தோர்

நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்

இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்

உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே. 1

 

 

வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் ணித்தில வாள்நகைக்குத்

தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற்

படுத்தநன் நீள்கழ லீசர்சிற் றம்பலந் தாம்பணியார்க் 

கடுத்தன தாம்வரிற் பொல்லா திரவின்நின் னாரருளே. 2

 

 

குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து

மின்தங் கிடைநும் மையும்வந்து மேவுவன் அம்பலஞ்சேர்

மன்தங் கிடைமரு தேகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னைச்

சென்றங் கிடைகொண்டு வாடாவகைசெப்பு தேமொழியே. 3

 

 

கேழே வரையுமில் லோன்புலி யூர்ப்பயில் கிள்ளையன்ன

யாழேர் மொழியா ளிரவரி னும்பகற் சேறியென்று

வாழே னெனவிருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித்

தாழே னெனவிடைக் கட்சொல்லி யேகுதனி வள்ளலே. 4

 

 

வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து

தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன்

குருட்டிற் புகச்செற்ற கோன்புலி யூர்குறு கார்மனம்போன்

றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங னேசொல்லி ஏகுவனே. 5

 

 

நல்லாய் நமக்குற்ற தென்னென் றுரைக்கேன் நமர்தொடுத்த

வெல்லா நிதியு முடன்விடுப் பான்இமை யோரிறைஞ்சும்

மல்லார் கழலழல் வண்ணர்வண் தில்லை தொழார்களல்லாற்

செல்லா அழற்கட மின்றுசென் றார்நம் சிறந்தவரே. 6

 

 

அருந்தும் விடமணி யாம்மணி கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்

மருந்து மமிர்தமு மாகுமுன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்

திருந்துங் கடன்நெறி செல்லுமிவ் வாறுசிதைக்கு மென்றால்

வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாமினி வாழ்வகையே. 7

 

 

ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழுஞ்

சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்

கார்ப்புன்னை பொன்னவிழ் முத்தமணலிற் கலந்த கன்றார்

தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென் கொலாமின்று செய்கின்றதே. 8

 

 

கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா

மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்

வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர்

போல்

தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. 9

 

 

மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான்

கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்

நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல்

இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த வாறென்ப ரேந்திழையே. 10

 

 

வந்தாய் பவரையில் லாமயில் முட்டை இளையமந்தி

பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண் போஇனிதே

கொந்தார்நறுங் கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போற்

சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையுந் திருவினர்க்கே. 11

 

 

மொய்யென் பதேஇழை கொண்டவ னென்னைத் தன்மொய்கழற்காட்

செய்யென் பதேசெய்தவன் தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்

பொய்யென்ப தேகருத் தாயிற் புரிகுழற் பொற்றொடியாய்

மெய்யென்ப தேதுமற் றில்லைகொ லாமிவ் வியலிடத்தே. 12

 

 

மன்செய்த முன்னாள் மொழிவழியே அன்ன வாய்மைகண்டும்

என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாவென தின்னுயிரும்

பொன்செய்த மேனியன் றில்லை யுறாரிற் பொறையரிதாம்

முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே. 13

 

 

கருந்தினை யோம்பக் கடவுட் பராவி நமர்கலிப்பச்

சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற்

பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றிற்றுன்றி

விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே. 14

 

 

வென்றவர் முப்புரஞ் சிற்றம் பலத்துள்நின் றாடும்வெள்ளிக்

குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று

சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையுஞ் செல்லல்செப்பா

நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. 15

 

 

வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்

ஒருவன தன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத்

தருவன செய்தென தாவிகொண் டேகியென் நெஞ்சிற்றம்மை

இருவின காதல ரேதுசெய் வானின் றிருக்கின்றதே. 16

 

 

வேயின மென்தோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப்

பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி

ஆயின ஈசன் அமரர்க் கமரன்சிற் றம்பலத்தான்

சேயின தாட்சியிற் பட்டன ளாம்இத் திருந்திழையே. 17

 

 

கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில

குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர்

நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்

அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. 18

 

 

மாட்டியன் றேயெம் வயிற்பெரு நாணினி மாக்குடிமா

சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவ ளுள்ளமெல்லாங்

காட்டியன் றேநின்ற தில்லைச்தொல் லோனைக்கல் லாதவர்போல்

வாட்டியன் றேர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. 19

 

 

குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்

இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்

மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த

அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே. 20

 

 

வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க

காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற

மேலன் புகுந்தென்கண் நின்றா னிருந்தவெண் காடனைய

பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. 21

 

 

அயர்ந்தும் வெறிமறிஆவி செகுத்தும் விளர்ப் பயலார்

பெயர்ந்தும் ஒழியாவிடி னென்னை பேசுவ பேர்ந்திருவர்

உயர்ந்தும் பணிந்தும் உணரான தம்பலம் உன்னலரின்

துயர்ந்தும் பிறிதி னொழியினென் ஆதுந் துறைவனுக்கே. 22

 

 

சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்

நன்றா வழகிதன் றேயிறை தில்லை தொழாரின் நைந்தும்

ஒன்றாமிவட்கு மொழிதல்கில் லேன்மொழி யாதுமுய்யேன்

குன்றார் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே. 23

 

 

யாயுந் தெறுக அயலவ ரேசுக ஊர்நகுக

நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவ லென்னுடைய

வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல்

தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. 24

 

 

வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்

உண்டலுற் றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க்

கொண்டலுற் றேறுங் கடல்வர எம்முயிர் கொண்டுதந்து

கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென் றானொர் கழலவனே. 25

 

 

குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தன்தாள்

முடிக்கல ராக்குமொய் பூந்துறை வற்கு முரிபுருவ

வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும்

படிக்கல ராமிவை யென்நாம் மறைக்கும் பரிசுகளே. 26

 

 

விதியுடை யாருண்க வேரி விலக்கலம் அம்பலத்துப்

பதியுடை யான்பரங் குன்றினிற் பாய்புனல் யாமொழுகக்

கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின்

மதியுடை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே.   27

 

 

மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்

எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச்

சினக்களி யானை கடிந்தா ரொருவர்செவ் வாய்ப்பசிய

புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே. 28

 

 

இளையா ளிவளையென் சொல்லிப் பரவுது மீரெயிறு

முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர்

வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன்

திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே. 29

 

 

கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்

புள்ளின மார்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கடம்

வள்ளின மார்ப்ப மதுகர மார்ப்ப வலம்புரியின்

வெள்ளின மார்ப்ப வரும்பெருந் தேரின்று மெல்லியலே. 30

 

 

பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த

தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மாலயற்குங்

காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் தில்லையன்ன

வாரண வும்முலை மன்றலென் றேங்கும் மணமுரசே. 31

 

 

அடற்களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் துன்பவின்பம்

படக்களி யாவண் டறைபொழிற் றில்லைப் பரமன்வெற்பிற்

கடக்களி யானை கடிந்தவர்க் கோவன்றி நின்றவர்க்கோ

விடக்களி யாம்நம் விழுநக ரார்க்கும் வியன்முரசே. 32

 

 

என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித்

தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக்

கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார்

முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே. 33

 

திருச்சிற்றம்பலம்