அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
எழுங்குலை வாழையின் இன்கனி தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென் னோநின் னருள்வகையே. 1
பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந் தோன்றுமிக் குன்றிடத்தே. 2
சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில் உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. 3
கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே. 4
களிறுற்ற செல்லல் களைவயிற் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை நாடபெடை நடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகல்நீ செய்யும் மெய்யருளே. 5
கழிகட் டலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின்வரல்கழல் கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலில் துவளு மிவள்பொருட்டே. 6
விண்ணுஞ் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற் கானல் அரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும் நோக்கினள் கார்மயிலே. 7
வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. 8
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர் காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும் படர்முலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. 9
கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை யோநும் வரையிடத்தே. 10
இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல ராம்பக லுன்னருளே. 11
சுழியா வருபெருநீர் சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரில் நீயிர வேதும் பயனில்லையே. 12
மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத் தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. 13
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
வாமான் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்னாஞ் சொல்லுந் தன்மைகளே. 14
வல்சியி னெண்கு வளர்புற் றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென் பவர்ப்பெறிற் கார்மயிலே. 15
வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந் நீர்மையென் னெய்துவதே. 16
திருச்சிற்றம்பலம்