அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
பொருளா வெனைப்புகுந் தாண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா தழியுமென் னாருயிரே. 1
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. 2
விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம் பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றொர் பெண்கொடியே. 3
கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. 4
நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை மல்லற்கண் ணார்ந்த பெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. 5
அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன் னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே. 6
யாழுமெழுதி யெழின்முத் தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந் தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. 7
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்செய்க அறிந்தனவே. 8
பைந்நா ணரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயா னழுந்தினு மென்னின்முன்னும்
இந்நாளிதுமது வார்குழ லாட்கென்க ணின்னருளே. 9
திருச்சிற்றம்பலம்