அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
எளிதன் றினிக்கனி வாய்வல்லி புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக்கூத்தப் பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு வாழி யறிவிப்பனே. 1
குவளைக் கருங்கட் கொடியே ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே. 2
இருங்களி யாயின் றியானிறு மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாவன லாடவல் லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. 3
கருங்கண் ணனையறியாமைநின் றோன்றில்லைக்கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு புண்புண ரிப் புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே. 4
சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநுஞ் சீறூர்க் குரைமின்கள் சென்னெறியே. 5
ஒருங்கட மூவெயி லொற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற் கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி யோவிங்கு வாழ்பவர்க்கு. 6
தாரென்ன வோங்குஞ் சடைமுடி மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற் றம்பல வன்கயிலை
ஊரென்ன வென்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே.7
இரத முடையநடமாட் டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே. 8
வின்னிற வாணுதல் வேனிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின் றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ மணிநிறப் பூந்தழையே. 9
கலைக்கி ழகலல்குற் பாரம தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற் றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. 10
திருச்சிற்றம்பலம்