எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

002 பாங்கற் கூட்டம்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள்

ஆங்கெனை யாண்டுகொண்டாடும் பிரானடித் தாமரைக்கே

பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால்

ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே.   1

 

 

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவா னுயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே.         2

 

 

கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும்

பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே

தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள்

ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே.    3

 

 

உளமாம் வகைநம்மை யுய்யவந் தாண்டுசென் றும்பருய்யக்

களமாம் விடமமிர் தாக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை

வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல்

இளமான் விழித்ததென் றோஇன்றெம் மண்ண லிரங்கியதே.    4

 

 

சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து

மாணிக்கக் கூத்தன் வடவான்கயிலை மயிலைமன்னும்

பூணிற் பொலிகொங்கை யாவியையோவியப் பொற்கொழுந்தைக்

காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே.     5

 

 

விலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்

கலங்கலைச் சென்றஅன் றுங்கலங் காய்கமழ் கொன்றைதுன்றும்

அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானரு ளில்லவர்போல்

துலங்கலைச் சென்றிதென் னோவள்ள லுள்ளந் துயர்கின்றதே.    6

 

 

தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று

மலைத்தறி வாரில்லை யாரையுந் தேற்றுவ னெத்துணையுங்

கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை

மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே.   7

 

 

நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற்

கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன் சொல்ல

வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித்

தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே.    8

 

 

ஆலத்தி னாலமிர்தாக்கிய கோன்தில்லை யம்பலம்போற்

கோலத்தி னாள்பொருட் டாகவமிர்தங் குணங்கெடினுங்

காலத்தி னான்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற்

சீலத்தை நீயும்நினையா தொழிவதென் தீவினையே.      9

 

 

நின்னுடை நீர்மையும் நீயுமிவ் வாறுநினைத் தெருட்டும்

என்னுடை நீர்மையி தென்னென்ப தேதில்லை யேர்கொண்முக்கண்

மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா

என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே.       10

 

 

விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று

மொழியாற் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்

கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்

கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே.   11

 

 

குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்

கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட் செவ்வாய்

மயிலைச் சிலம்பகண்டி யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்

பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே.   12

 

 

கொடுங்கால் குலவரையேழேழ் பொழிலெழில் குன்றுமன்று

நடுங்காதவனை நடுங்க நுடங்கு நடுவுடைய

விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ லாந்தில்லை ஈசன்வெற்பில்

தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலந் தண்புனத்தே.     13

 

 

வடிக்கணிவை வஞ்சி யஞ்சும் இடையிது வாய்பவளந்

துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் றொடர்ந்துவிடா

அடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போற்

படிச்சந் தமுமிது வேயிவ ளேஅப் பணிமொழியே.       14

 

 

குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற்கமலத்

தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின்

இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்து ணையும்பகர்ந்த

கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே.       15

 

 

பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்

புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே

மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பிமடப்பிடிவாய்

நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேனொன்று நின்றதுவே.    16

 

 

கயலுள வேகம லத்தலர் மீது கனிபவளத்

தயலுள வேமுத்த மொத்த நிரையரன் அம்பலத்தின்

இயலுள வேயிணைச் செப்புவெற் பாநின தீர்ங்கொடிமேல்

புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே.     17

 

 

எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக்

குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத்

தயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனநடக்கும்

மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே.     18

 

 

ஆவியன் னாய்கவ லேல்அக லேமென்றளித்தொளித்த

ஆவியன் னார்மிக் கவாவின ராய்க்கெழு மற்கழிவுற்

றாவியன் னார்மன்னி யாடிடஞ் சேர்வர்கொ லம்பலத்தெம்

ஆவியன் னான்பயி லுங்கயி லாயத் தருவரையே.       19

 

 

காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால்

வாம்பிணை யால்வல்லி யொல்குத லான்மன்னு மம்பலவன்

பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமுந்

தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே.    20

 

 

நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்துநெஞ்சம் நெகப்போய்

ஆயத்த தாயமிழ் தாயணங் காயர னம்பலம்போல்

தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது

மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே.      21

 

 

தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று

சோதி வரிப்பந்தடியார் சுனைப்புன லாடல் செய்யார்

போதிவர் கற்பகநாடுபுல் லென்னத்தம் பொன்னடிப்பாய்

யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை யெய்துதற்கே.      22

 

 

காவிநின் றேர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்

தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது

மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென்

ஆவியன் றேயமிழ் தேயணங் கேயின் றழிகின்றதே.     23

 

 

அகலிடந்தாவிய வானோ னறிந்திறைஞ் சம்பலத்தின்

இகலிடம் தாவிடை யீசற் றொழாரினின் னற்கிடமாய்

உகலிடந் தான்சென் றெனதுயிர் நையா வகையொதுங்கப்

புகலிடந் தாபொழில் வாயெழில் வாய்தரு பூங்கொடியே.   24

 

 

தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்

சூழச்செய் தானம் பலங்கை தொழாரினுள் ளந்துளங்கப்

போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேயென்னைநீ

வாழச்செய் தாய்சுற்று முற்றும் புதைநின்னை வாணுதலே.    25

 

 

குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர்போல்

வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்

றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த

அருநாணளிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே.   26

 

 

கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ்

சீலத் தனகொங்கை தேற்றகிலேஞ்சிவன் தில்லையன்னாள்

நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால்

சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே.  27  

 

 

நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்

வாங்கிருந் தெண்கடல் வையமு மெய்தினும் யான்மறவேன்

தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்புங்

கோங்கரும் புந்தொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கைகளே.    28

 

 

சூளாமணியும்பர்க் காயவன் சூழ்பொழிற் றில்லையன்னாய்க்

காளா யொழிந்த தென்னாருயிர் ஆரமிழ் தேயணங்கே

தோளா மணியே பிணையே பலசொல்லி யென்னைதுன்னும்

நாளார் மலர்பொழில் வாயெழி லாயம் நணுகுகவே.  29                

 

 

பொய்யுடை யார்க்கரன் போலக லும்மகன் றாற்புணரின்

மைய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்

மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான்

பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே.  30

 

திருச்சிற்றம்பலம்