அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்து
உருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. 1
போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே. 2
பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி
ஆயும் மனனே யணங்கல்ல ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. 3
அகல்கின்ற வல்குற் றடமது கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ னம்மன்ன பல்வளைக்கே. 4
அணியு மமிழ்துமென் னாவியு மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே. 5
வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நயவேன்தெய்வ மிக்கனவே. 6
ஏழுடை யான்பொழி லெட்டுடை யான்புய மென்னை முன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங் காய்வந் தகப்பட்டதே. 7
சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே. 8
உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே. 9
அளவியை யார்க்கு மறிவரி யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங் கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமைதோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. 10
கூம்பலங் கைதலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. 11
சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே. 12
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ நெடிதிங்க னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ அறியே னயர்கின்றதே. 13
தேவரிற் பெற்றநஞ் செல்வக் கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப் பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம் பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென் வாடிப் புலம்புவதே. 14
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகைநுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங் கனங்குழையே. 15
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. 16
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. 17
உயிரொன் றுளமுமொன் றொன்றே சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுறநீள்படைக் கண்கள் விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ்செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென லாகும் பணிமொழிக்கே. 18
திருச்சிற்றம்பலம்