ஏழாம்-திருமுறை

100 தானெனை முன்படைத்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)

திருச்சிற்றம்பலம்

 

தானெனை முன்படைத் தானத

  றிந்துதன் பொன்னடிக்கே

நானென பாடலந் தோநாயி

  னேனைப் பொருட்படுத்து

வானெனை வந்தெதிர் கொள்ளமத்த 

  யானை அருள்புரிந்து

ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.  1 

 

 

ஆனை உரித்த பகைஅடி

  யேனொடு மீளக்கொலோ

ஊனை உயிர்வெருட் டிஒள்ளி

  யானை நினைந்திருந்தேன்

வானை மதித்தம ரர்வலஞ்

  செய்தெனை ஏறவைக்க

ஆனை அருள்புரிந் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.  2 

 

 

மந்திரம் ஒன்றறி யேன்மனை

  வாழ்க்கை மகிழ்ந்தடியேன்

சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்

  தொண்டனெனை

அந்தர மால்விசும் பில்அழ

  கானை அருள்புரிந்த

துந்தர மோநெஞ்ச மேநொடித்

  தான்மலை உத்தமனே.  3 

 

 

வாழ்வை உகந்தநெஞ் சேமட

  வார்தங்கள் வல்வினைப்பட்

டாழ முகந்தவென் னைஅது

  மாற்றி அமரரெல்லாஞ்

சூழ அருள்புரிந் துதொண்ட

  னேன்பரம் அல்லதொரு

வேழம் அருள்புரிந் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.  4 

 

 

மண்ணுல கிற்பிறந் துநும்மை

  வாழ்த்தும் வழியடியார்

பொன்னுல கம்பெறு தல்தொண்ட

  னேனின்று கண்டொழிந்தேன்

விண்ணுல கத்தவர் கள்விரும்ப 

  வெள்ளை யானையின்மேல்

என்னுடல் காட்டுவித் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.  5 

 

 

அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்

  கொண்டடி சேர்வறியா

வஞ்சனை யென்மன மேவைகி

  வானநன் னாடர்முன்னே

துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட

  னேன்பர மல்லதொரு

வெஞ்சின ஆனைதந் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.  6 

 

 

நிலைகெட விண்ணதி ரநில

  மெங்கும் அதிர்ந்தசைய

மலையிடை யானையே றிவழி

  யேவரு வேன்எதிரே

அலைகட லால்அரை யன்அலர்

  கொண்டுமுன் வந்திறைஞ்ச

உலையணை யாதவண் ணம்நொடித்

  தான்மலை உத்தமனே.  7 

 

 

அரவொலி ஆகமங் கள்அறி

  வாரறி தோத்திரங்கள்

விரவிய வேதஒ லிவிண்ணெ

  லாம்வந் தெதிர்ந்திசைப்ப

வரமலி வாணன்வந் துவழி

  தந்தெனக் கேறுவதோர்

சிரமலி யானைதந் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.  8 

 

 

இந்திரன் மால்பிர மன்னெழி

  லார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த

  யானை அருள்புரிந்து

மந்திர மாமுனி வர்இவ னாரென

  எம்பெருமான்

நந்தமர் ஊரனென் றான்நொடித்

  தான்மலை உத்தமனே.  9 

 

 

ஊழிதோ றூழிமுற் றுமுயர்

  பொன்னொடித் தான்மலையைச்

சூழிசை யின்கரும் பின்சுவை

  நாவல ஊரன்சொன்ன

ஏழிசை இன்றமி ழால்இசைந்

  தேத்திய பத்தினையும்

ஆழி கடலரை யாஅஞ்சை

  யப்பர்க் கறிவிப்பதே.  10 

திருச்சிற்றம்பலம்

மேலும்

வெள்ளையானை சாபம் தீர்த்தல்
View Details
அமர்நீதி நாயனார்
View Details
சமணர் ஏவிய யானை வதம்
View Details