ஏழாம்-திருமுறை

085 வடிவுடை மழுவேந்தி

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கூடலையாற்றூர்

திருச்சிற்றம்பலம்

 

வடிவுடை மழுவேந்தி

  மதகரி உரிபோர்த்துப்

பொடியணி திருமேனிப்

  புரிகுழல் உமையோடும்

கொடியணி நெடுமாடக்

  கூடலை யாற்றூரில்

அடிகள்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  1 

 

 

வையகம் முழுதுண்ட

  மாலொடு நான்முகனும்

பையர விளவல்குற்

  பாவையொ டும்முடனே

கொய்யணி மலர்ச்சோலைக்

  கூடலை யாற்றூரில்

ஐயன்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  2 

 

 

ஊர்தொறும் வெண்டலைகொண்

  டுண்பலி இடுமென்று

வார்தரு மென்முலையாள்

  மங்கையொ டும்முடனே

கூர்நுனை மழுவேந்திக்

  கூடலை யாற்றூரில்

ஆர்வன்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  3 

 

 

சந்தண வும்புனலுந்

  தாங்கிய தாழ்சடையன்

பந்தண வும்விரலாள்

  பாவையொ டும்முடனே

கொந்தண வும்பொழில்சூழ்

  கூடலை யாற்றூரில்

அந்தணன் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  4 

 

 

வேதியர் விண்ணவரும்

  மண்ணவ ருந்தொழநற்

சோதிய துருவாகிச்

  சுரிகுழல் உமையோடும்

கோதிய வண்டறையுங்

  கூடலை யாற்றூரில்

ஆதிஇவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  5 

 

 

வித்தக வீணையொடும்

  வெண்புரி நூல்பூண்டு

முத்தன வெண்முறுவல்

  மங்கையொ டும்முடனே

கொத்தல ரும்பொழில்சூழ்

  கூடலை யாற்றூரில்

அத்தன்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  6 

 

 

மழைநுழை மதியமொடு

  வாளர வஞ்சடைமேல்

இழைநுழை துகில்அல்குல்

  ஏந்திழை யாளோடும்

குழையணி திகழ்சோலைக்

  கூடலை யாற்றூரில்

அழகன்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  7 

 

 

மறைமுதல் வானவரும்

  மாலயன் இந்திரனும்

பிறைநுதல் மங்கையொடும்

  பேய்க்கண முஞ்சூழக்

குறள்படை யதனோடுங்

  கூடலை யாற்றூரில்

அறவன்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  8 

 

 

வேலையின் நஞ்சுண்டு

  விடையது தான்ஏறிப்

பாலன மென்மொழியாள்

  பாவையொ டும்முடனே

கோலம துருவாகிக்

  கூடலை யாற்றூரில்

ஆலன்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே.  9 

 

 

கூடலை யாற்றூரிற்

  கொடியிடை யவளோடும்

ஆடலு கந்தானை

  அதிசயம் இதுவென்று

நாடிய இன்றமிழால்

  நாவல வூரன்சொற்

பாடல்கள் பத்தும்வல்லார்

  தம்வினை பற்றறுமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மாயக் குதிரைகள் விற்றல்
View Details
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
View Details
சங்கப் பலகையளித்தல்
View Details