ஏழாம்-திருமுறை

079 மானும்மரை இனமும்மயில்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : பருப்பதம்

திருச்சிற்றம்பலம்

 

மானும்மரை இனமும்மயில்

  இனமுங்கலந் தெங்குந்

தாமேமிக மேய்ந்துதடஞ்

  சுனைநீர்களைப் பருகிப்

பூமாமரம் உரிஞ்சிப்பொழி

  லூடேசென்று புக்குத்

தேமாம்பொழில் நீழல்துயில்

  சீபர்ப்பத மலையே.  1 

 

 

மலைச்சாரலும் பொழிற்சாரலும்

  புறமேவரும் இனங்கள்

மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட

  மலங்கித்தன களிற்றை

அழைத்தோடியும் பிளிறீயவை

  அலமந்துவந் தெய்த்துத்

திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ்

  சீபர்ப்பத மலையே.  2 

 

 

மன்னிப்புனங் காவல்மட

  மொழியாள்புனங் காக்கக்

கன்னிக்கிளி வந்துகவைக்

  கோலிக்கதிர் கொய்ய

என்னைக்கிளி மதியாதென்று

  எடுத்துக்கவண் ஒலிப்பத்

தென்னற்கிளி திரிந்தேறிய

  சீபர்ப்பத மலையே.  3 

 

 

மையார்தடங் கண்ணாள்மட

  மொழியாள்புனங் காக்கச்

செவ்வேதிரிந் தாயோவெனப்

  போகாவிட விளிந்து

கைபாவிய கவணால்மணி

  எறியஇரிந் தோடிச்

செவ்வாயன கிளிபாடிடுஞ்

  சீபர்ப்பத மலையே.  4 

 

 

ஆனைக்குலம் இரிந்தோடித்தன்

  பிடிசூழலிற் றிரியத்

தானப்பிடி செவிதாழ்த்திட

  அதற்குமிக இரங்கி

மானக்குற அடல்வேடர்கள்

  இலையாற்கலை கோலித்

தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ்

  சீபர்ப்பத மலையே.  5 

 

 

மாற்றுக்களி றடைந்தாயென்று

  மதவேழங்கை யெடுத்து

மூற்றித்தழல் உமிழ்ந்தும்மதம்

  பொழிந்தும்முகஞ் சுழியத்

தூற்றத்தரிக் கில்லேனென்று

  சொல்லிஅயல் அறியத்

தேற்றிச்சென்று பிடிசூளறுஞ்

  சீபர்ப்பத மலையே.  6 

 

 

அப்போதுவந் துண்டீர்களுக்

  கழையாதுமுன் னிருந்தேன்

எப்போதும்வந் துண்டாலெமை

  எமர்கள்சுழி யாரோ

இப்போதுமக் கிதுவேதொழில்

  என்றோடியக் கிளியைச்

செப்பேந்திள முலையாள்எறி

  சீபர்ப்பத மலையே.  7 

 

 

திரியும்புரம் நீறாக்கிய

  செல்வன்றன கழலை

அரியதிரு மாலோடயன்

  றானும்மவர் அறியார்

கரியின்னினம் ஓடும்பிடி

  தேனுண்டவை களித்துத்

திரிதந்தவை திகழ்வாற்பொலி

  சீபர்ப்பத மலையே.  8 

 

 

ஏனத்திரள் கிளைக்கஎரி

  போலமணி சிதற

ஏனல்லவை மலைச்சாரலிற்

  றிரியுங்கர டீயும்

மானும்மரை இனமும்மயில்

  மற்றும்பல வெல்லாந்

தேனுண்பொழில் சோலைமிகு

  சீபர்ப்பத மலையே.  9 

 

 

நல்லாரவர் பலர்வாழ்தரு

  வயல்நாவல வூரன்

செல்லல்லுற அரியசிவன்

  சீபர்ப்பத மலையை

அல்லலவை தீரச்சொன

  தமிழ்மாலைகள் வல்லார்

ஒல்லைச்செல உயர்வானகம்

  ஆண்டங்கிருப் பாரே.  10 

 

திருச்சிற்றம்பலம்