ஏழாம்-திருமுறை

071 யாழைப்பழித் தன்னமொழி

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : மறைக்காடு

திருச்சிற்றம்பலம்

 

யாழைப்பழித் தன்னமொழி

  மங்கையொரு பங்கன்

பேழைச்சடை முடிமேற்பிறை

  வைத்தான்இடம் பேணில்

தாழைப்பொழி லூடேசென்று

  பூழைத்தலை நுழைந்து

வாழைக்கனி கூழைக்குரங்

  குண்ணும்மறைக் காடே.  1 

 

 

சிகரத்திடை இளவெண்பிறை

  வைத்தான்இடந் தெரியில்

முகரத்திடை முத்தின்னொளி

  பவளத்திரள் ஓதத்

தகரத்திடை தாழைத்திரள்

  ஞாழற்றிரள் நீழல்

மகரத்தொடு சுறவங்கொணர்ந்

  தெற்றும்மறைக் காடே.  2 

 

 

அங்கங்களும் மறைநான்குடன்

  விரித்தானிடம் அறிந்தோம்

தெங்கங்களும் நெடும்பெண்ணையும்

  பழம்வீழ்மணற் படப்பைச்

சங்கங்களும் இலங்கிப்பியும்

  வலம்புரிகளும் இடறி

வங்கங்களும் உயர்கூம்பொடு

  வணங்கும்மறைக் காடே.  3 

 

 

நரைவிரவிய மயிர்தன்னொடு

  பஞ்சவடி மார்பன்

உரைவிரவிய உத்தமனிடம்

  உணரல்லுறு மனமே

குரைவிரவிய குலசேகரக்

  கொண்டற்றலை விண்ட

வரைபுரைவன திரைபொருதிழிந்

  தெற்றும்மறைக் காடே.  4 

 

 

சங்கைப்பட நினையாதெழு

  நெஞ்சேதொழு தேத்தக்

கங்கைச்சடை முடியுடையவர்க்

  கிடமாவது பரவை

அங்கைக்கடல் அருமாமணி

  உந்திக்கரைக் கேற்ற

வங்கத்தொடு சுறவங்கொணர்ந்

  தெற்றும்மறைக் காடே.  5 

 

 

அடல்விடையினன் மழுவாளினன்

  அலராலணி கொன்றைப்

படருஞ்சடை முடியுடையவர்க்

  கிடமாவது பரவைக்

கடலிடையிடை கழியருகினிற்

  கடிநாறுதண் கைதை

மடலிடையிடை வெண்குருகெழு

  மணிநீர்மறைக் காடே.  6 

 

 

முளைவளரிள மதியுடையவன்

  முன்செய்தவல் வினைகள்

களைகளைந்தெனை ஆளல்லுறு

  கண்டன்னிடஞ் செந்நெல்

வளைவிளைவயற் கயல்பாய்தரு

  குணவார்மணற் கடல்வாய்

வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந்

  தெற்றும்மறைக் காடே.  7 

 

 

நலம்பெரியன சுரும்பார்ந்தன

  நங்கோனிடம் அறிந்தோம்

கலம்பெரியன சாருங்கடற்

  கரைபொருதிழி கங்கைச்

சலம்புரிசடை முடியுடையவர்க்

  கிடமாவது பரவை

வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந்

  தெற்றும்மறைக் காடே.  8 

 

 

குண்டாடியுஞ் சமணாடியுங்

  குற்றுடுக்கையர் தாமுங்

கண்டார்கண்ட காரணம்மவை

  கருதாதுகை தொழுமின்

எண்டோ ளினன் முக்கண்ணினன்

  ஏழிசையினன் அறுகால்

வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு

  மணிநீர்மறைக் காடே.  9 

 

 

பாரூர்பல புடைசூழ்வள

  வயல்நாவலர் வேந்தன்

வாரூர்வன முலையாள்உமை

  பங்கன்மறைக் காட்டை

ஆரூரன தமிழ்மாலைகள்

  பாடும்மடித் தொண்டர்

நீரூர்தரு நிலனோடுயர்

  புகழாகுவர் தாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details
ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர்
View Details
அதிபத்த நாயனார்
View Details