ஏழாம்-திருமுறை

052 முத்தா முத்தி தரவல்ல

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : ஆலங்காடு

திருச்சிற்றம்பலம்

 

முத்தா முத்தி தரவல்ல

  முகிழ்மென் முலையா ளுமைபங்கா

சித்தா சித்தித் திறங்காட்டுஞ்

  சிவனே தேவர் சிங்கமே

பத்தா பத்தர் பலர்போற்றும்

  பரமா பழைய னூர்மேய

அத்தா ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  1 

 

 

பொய்யே செய்து புறம்புறமே

  திரிவேன் றன்னைப் போகாமே

மெய்யே வந்திங் கெனையாண்ட

  மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே

பையா டரவம் அரைக்கசைத்த

  பரமா பழைய னூர்மேய

ஐயா ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  2 

 

 

தூண்டா விளக்கின் நற்சோதீ

  தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்

பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்

  பொடியாச் செற்ற புண்ணியனே

பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்

  பரமா பழைய னூர்மேய

ஆண்டா ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  3 

 

 

மறிநேர் ஒண்கண் மடநல்லார்

  வலையிற் பட்டு மதிமயங்கி

அறிவே அழிந்தே னையாநான்

  மையார் கண்ட முடையானே

பறியா வினைக ளவைதீர்க்கும்

  பரமா பழைய னூர்மேய

அறிவே ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  4 

 

 

வேலங் காடு தடங்கண்ணார்

  வலையுட் பட்டுன் நெறிமறந்து

மாலங் காடி மறந்தொழிந்தேன்

  மணியே முத்தே மரகதமே

பாலங் காடி நெய்யாடி

  படர்புன் சடையாய் பழையனூர்

ஆலங் காடா உன்னுடைய

  அடியார்க் கடியேன் ஆவேனே.  5 

 

 

எண்ணார் தங்கள் எயிலெய்த

  எந்தாய் எந்தை பெருமானே

கண்ணாய் உலகங் காக்கின்ற

  கருத்தா திருத்த லாகாதாய்

பண்ணா ரிசைக ளவைகொண்டு

  பலரும் ஏத்தும் பழையனூர்

அண்ணா ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  6 

 

 

வண்டார் குழலி உமைநங்கை

  பங்கா கங்கை மணவாளா

விண்டார் புரங்க ளெரிசெய்த

  விடையாய் வேத நெறியானே

பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்

  பரமா பழைய னூர்மேய

அண்டா ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  7 

 

 

பேழ்வா யரவி னணையானும்

  பெரிய மலர்மே லுறைவானுந்

தாழா துன்றன் சரண்பணியத்

  தழலாய் நின்ற தத்துவனே

பாழாம் வினைக ளவைதீர்க்கும்

  பரமா பழையனூர் தன்னை

ஆள்வாய் ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  8 

 

 

எம்மான் எந்தை மூத்தப்பன்

  ஏழேழ் படிகால் எமையாண்ட

பெம்மான் ஈமப் புறங்காட்டிற்

  பேயோ டாடல் புரிவானே

பன்மா மலர்க ளவைகொண்டு

  பலரும் ஏத்தும் பழையனூர்

அம்மா ஆலங் காடாவுன்

  அடியார்க் கடியேன் ஆவேனே.  9 

 

 

பத்தர் சித்தர் பலரேத்தும்

  பரமன் பழைய னூர்மேய

அத்தன் ஆலங் காடன்றன்

  அடிமைத் திறமே அன்பாகிச்

சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்

  சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்

பத்தும் பாடி ஆடுவார்

  பரமன் அடியே பணிவாரே.  10 

 

திருச்சிற்றம்பலம்