ஏழாம்-திருமுறை

050 சித்தம் நீநினை என்னொடு

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : புனவாயில்

திருச்சிற்றம்பலம்

 

சித்தம் நீநினை என்னொடு

  சூளறும் வைகலும்

மத்த யானையின் ஈருரி

  போர்த்த மணாளனூர்

பத்தர் தாம்பலர் பாடிநின்

  றாடும் பழம்பதி

பொத்தில் ஆந்தைகள் பாட்ட

  றாப்புன வாயிலே.  1 

 

 

கருது நீமனம் என்னொடு

  சூளறும் வைகலும்

எருது மேற்கொளும் எம்பெரு

  மாற்கிட மாவது

மருத வானவர் வைகும்

  இடம்மற வேடுவர்

பொருது சாத்தொடு பூசல

  றாப்புன வாயிலே.  2 

 

 

தொக்கா யமனம் என்னொடு

  சூளறும் வைகலும்

நக்கான் நமை யாளுடை

  யான்நவி லும்மிடம்

அக்கோ டரவார்த் தபிரா

  னடிக் கன்பராய்ப்

புக்கா ரவர் போற்றொழி

  யாப்புன வாயிலே.  3 

 

 

வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு

  சூளறும் வைகலும்

பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன்

  னாமது வேபுகல்

கற்குன்றுந் தூறுங் கடுவெளி

  யுங்கடற் கானல்வாய்ப்

புற்கென்று தோன்றிடு மெம்பெரு

  மான்புன வாயிலே.  4 

 

 

நில்லாய் மனம் என்னொடு

  சூளறும் வைகலும்

நல்லான் நமை யாளுடை

  யான்நவி லும்மிடம்

வில்லாய்க் கணை வேட்டுவர்

  ஆட்ட வெருண்டுபோய்ப்

புல்வாய்க் கணம் புக்கொளிக்

  கும்புன வாயிலே.  5 

 

 

மறவல் நீமனம் என்னொடு

  சூளறும் வைகலும்

உறவும் ஊழியு மாயபெம்

  மாற்கிட மாவது

பிறவு கள்ளியின் நீள்கவட்

  டேறித்தன் பேடையைப்

புறவங் கூப்பிடப் பொன்புனஞ்

  சூழ்புன வாயிலே.  6 

 

 

ஏசற்று நீநினை யென்னொடு

  சூளறும் வைகலும்

பாசற் றவர் பாடிநின்

  றாடும் பழம்பதி

தேசத் தடியவர் வந்திரு

  போதும் வணங்கிடப்

பூசற் றுடிபூச லறாப்

  புன வாயிலே.  7 

 

 

கொள்ளி வாயின கூரெயிற்

  றேனங் கிழிக்கவே

தெள்ளி மாமணி தீவிழிக்

  கும்மிடஞ் செந்தறை

கள்ளி வற்றிப்புல் தீந்துவெங்

  கானங் கழிக்கவே

புள்ளி மானினம் புக்கொளிக்

  கும்புன வாயிலே.  8 

 

 

எற்றே நினை என்னொடுஞ்

  சூளறும் வைகலும்

மற்றேதும் வேண்டா வல்வினை

  யாயின மாய்ந்தறக்

கற்றூறு கார்க் காட்டிடை

  மேய்ந்தகார்க் கோழிபோய்ப்

புற்றேறிக் கூகூ எனஅழைக்

  கும்புன வாயிலே.  9 

 

 

பொடியாடு மேனியன் பொன்புனஞ்

  சூழ்புன வாயிலை

அடியார் அடியன் நாவல

  வூரன் உரைத்தன

மடியாது கற்றிவை யேத்தவல்

  லார்வினை மாய்ந்துபோய்க்

குடியாகப் பாடிநின் றாடவல்

  லார்க்கில்லை குற்றமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள்
View Details
சமணர் ஏவிய யானை வதம்
View Details
சோமாசி மாற நாயானார்
View Details