ஏழாம்-திருமுறை

047 காட்டூர்க் கடலே கடம்பூர்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே

  கானப் பேரூராய்

கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே

  கொழுநற் கொல்லேறே

பாட்டூர் பலரும் பரவப் படுவாய்

  பனங்காட் டூரானே

மாட்டூர் அறவா மறவா துன்னைப்

  பாடப் பணியாயே.  1 

 

 

கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்

  குழகா குற்றாலா

மங்குற் றிரிவாய் வானோர் தலைவா

  வாய்மூர் மணவாளா

சங்கக் குழையார் செவியா அழகா

  அவியா அனலேந்திக்

கங்குற் புறங்காட் டாடீ அடியார்

  கவலை களையாயே.  2 

 

 

நிறைக்காட் டானே நெஞ்சத் தானே

  நின்றி யூரானே

மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய்

  அனல்சேர் கையானே

மறைக்காட் டானே திருமாந் துறையாய்

  மாகோ ணத்தானே

இறைக்காட் டாயே எங்கட் குன்னை

  எம்மான் றம்மானே.  3 

 

 

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே

  அளப்பூர் அம்மானே

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்

  கருகா வூரானே

பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான்

  பிறவா நெறியானே

பாரூர் பலரும் பரவப் படுவாய்

  பாசூ ரம்மானே.  4 

 

 

மருகல் உறைவாய் மாகா ளத்தாய்

  மதியஞ் சடையானே

அருகற் பிணிநின் னடியார் மேல

  அகல அருளாயே

கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே

  கானூர்க் கட்டியே

பருகப் பணியாய் அடியார்க் குன்னைப்

  பவளப் படியானே.  5 

 

 

தாங்கூர் பிணிநின் னடியார் மேல

  அகல அருளாயே

வேங்கூர் உறைவாய் விளமர் நகராய்

  விடையார் கொடியானே

நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்

  நல்லூர் நம்பானே

பாங்கூர் பலிதேர் பரனே பரமா

  பழனப் பதியானே.  6 

 

 

தேனைக் காவல் கொண்டு விண்ட

  கொன்றைச் செழுந்தாராய்

வானைக் காவல் கொண்டு நின்றார்

  அறியா நெறியானே

ஆனைக் காவில் அரனே பரனே

  அண்ணா மலையானே

ஊனைக் காவல் கைவிட் டுன்னை

  உகப்பார் உணர்வாரே.  7 

 

 

துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய்

  சொல்லாய் கல்லாலா

பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப்

  பலவாய்க் காற்றானாய்

திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை

  இடங்கொள் கயிலாயா

அருத்தித் துன்னை அடைந்தார் வினைக

  ளகல அருளாயே.  8 

 

 

புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப்

  போதா மூதூரா

பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற

  புரிபுன் சடையானே

வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்

  கடர்த்த மதிசூடீ

கலிசேர் புறவிற் கடவூ ராளீ

  காண அருளாயே.  9 

 

 

கைம்மா உரிவை யம்மான் காக்கும்

  பலவூர் கருத்துன்னி

மைம்மாந் தடங்கண் மதுர மன்ன

  மொழியாள் மடச்சிங்கடி

தம்மான் ஊரன் சடையன் சிறுவன்

  அடியன் றமிழ்மாலை

செம்மாந் திருந்து திருவாய் திறப்பார்

  சிவலோ கத்தாரே.  10

 

திருச்சிற்றம்பலம்