ஏழாம்-திருமுறை

035 அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : புறம்பயம்

திருச்சிற்றம்பலம்

 

அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி

  நின்றும்போந்துவந் தின்னம்பர்த்

தங்கினோமையும் இன்னதென்றிலர்

  ஈசனாரெழு நெஞ்சமே

கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்

  ஏத்திவானவர் தாந்தொழும்

பொங்குமால்விடை யேறிசெல்வப்

  புறம்பயந்தொழப் போதுமே.  1 

 

 

பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்

  பண்டையாரலர் பெண்டிரும்

நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்

  நினைப்பொழிமட நெஞ்சமே

மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்

  மகிழும்மல்லிகை செண்பகம்

புதியபூமலர்ந் தெல்லிநாறும்

  புறம்பயந்தொழப் போதுமே.  2 

 

 

புறந்திரைந்து நரம்பெழுந்து

  நரைத்துநீயுரை யாற்றளர்ந்

தறம்புரிந்து நினைப்பதாண்மை

  அரிதுகாண்இஃ தறிதியேல்

திறம்பியாதெழு நெஞ்சமேசிறு

  காலைநாமுறு வாணியம்

புறம்பயத்துறை பூதநாதன்

  புறம்பயந்தொழப் போதுமே.  3 

 

 

குற்றொருவரைக் கூறைகொண்டு

  கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்

செற்றொருவரைச் செய்ததீமைகள்

  இம்மையேவருந் திண்ணமே

மற்றொருவரைப் பற்றிலேன்மற

  வாதெழுமட நெஞ்சமே

புற்றரவுடைப் பெற்றமேறி

  புறம்பயந்தொழப் போதுமே.  4 

 

 

கள்ளிநீசெய்த தீமையுள்ளன

  பாவமும்பறை யும்படி

தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்

  சேவுடைச்சிவ லோகனூர்

துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்

  தோன்றுதாமரைப் பூக்கள்மேல்

புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்

  புறம்பயந்தொழப் போதுமே.  5 

 

 

படையெலாம்பக டாரஆளிலும்

  பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்

கடையெலாம்பிணைத் தேரைவால்கவ

  லாதெழுமட நெஞ்சமே

மடையெலாங்கழு நீர்மலர்ந்து

  மருங்கெலாங்கரும் பாடத்தேன்

புடையெலாம்மணம் நாறுசோலைப்

  புறம்பயந்தொழப் போதுமே.  6 

 

 

முன்னைச்செய்வினை இம்மையில்வந்து

  மூடுமாதலின் முன்னமே

என்னைநீதியக் காதெழுமட

  நெஞ்சமேயெந்தை தந்தையூர்

அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்

  கூடிச்சேரு மணிபொழிற்

புன்னைக்கன்னி கழிக்கணாறும்

  புறம்பயந்தொழப் போதுமே.  7 

 

 

மலமெலாமறும் இம்மையேமறு

  மைக்கும்வல்வினை சார்கிலா

சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்

  சங்கரன்வந்து தங்குமூர்

கலமெலாங்கடல் மண்டுகாவிரி

  நங்கையாடிய கங்கைநீர்

புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்

  புறம்பயந்தொழப் போதுமே.  8 

 

 

பண்டரியன செய்ததீமையும்

  பாவமும்பறை யும்படி

கண்டரியன கேட்டியேற்கவ

  லாதெழுமட நெஞ்சமே

தொண்டரியன பாடித்துள்ளிநின்

  றாடிவானவர்தாந் தொழும்

புண்டரீக மலரும்பொய்கைப்

  புறம்பயந்தொழப் போதுமே.  9 

 

 

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்

  துயக்கறாத மயக்கிவை

அஞ்சிஊரன் திருப்புறம்பயத்

  தப்பனைத்தமிழ்ச் சீரினால்

நெஞ்சினாலே புறம்பயந்தொழு

  துய்துமென்று நினைத்தன

வஞ்சியாதுரை செய்யவல்லவர்

  வல்லவானுல காள்வரே.  10 

 

திருச்சிற்றம்பலம்