ஏழாம்-திருமுறை

032 கடிதாய்க் கடற்காற்று

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கோடிக்குழகர் (கோடியக்காடு)

திருச்சிற்றம்பலம்

 

கடிதாய்க் கடற்காற்று

  வந்தெற்றக் கரைமேற்

குடிதான் அயலேஇருந்

  தாற்குற்ற மாமோ

கொடியேன் கண்கள்கண்

  டனகோடிக் குழகீர்

அடிகேள் உமக்கார்

  துணையாக இருந்தீரே.  1 

 

 

முன்றான் கடல்நஞ்ச

  முண்ட அதனாலோ

பின்றான் பரவைக்

  குபகாரஞ் செய்தாயோ

குன்றாப் பொழில்சூழ்

  தருகோடிக் குழகா

என்றான் தனியே

  இருந்தாய் எம்பிரானே.  2 

 

 

மத்தம் மலிசூழ்

  மறைக்கா டதன்றென்பால்

பத்தர் பலர்பாட

  இருந்த பரமா

கொத்தார் பொழில்சூழ்

  தருகோடிக் குழகா

எத்தாற் றனியே

  இருந்தாய் எம்பிரானே.  3 

 

 

காடேல் மிகவா

  லிதுகா ரிகையஞ்சக்

கூடிப் பொந்தில்

  ஆந்தைகள் கூகைகுழற

வேடித்தொண்டர்

  சாலவுந் தீயர் சழக்கர்

கோடிக் குழகா

  இடங்கோயில் கொண்டாயே.  4 

 

 

மையார் தடங்கண்ணி

  பங்காகங் கையாளும்

மெய்யாகத் திருந்தனள்

  வேறிடம் இல்லை

கையார் வளைக்காடு

  காளோடும் உடனாய்க்

கொய்யார் பொழிற்கோடி

  யேகோயில் கொண்டாயே.  5 

 

 

அரவேர் அல்குலாளை

  ஓர்பாக மமர்ந்து

மரவங் கமழ்மா

  மறைக்கா டதன்றென்பாற்

குரவப் பொழில்சூழ்

  தருகோடிக் குழகா

இரவே துணையாய்

  இருந்தாய் எம்பிரானே.  6 

 

 

பறையுங் குழலும்

  ஒலிபாட லியம்ப

அறையுங் கழலார்க்க

  நின்றாடும் அமுதே

குறையாப் பொழில்சூழ்

  தருகோடிக் குழகா

இறைவா தனியே

  இருந்தாய் எம்பிரானே.  7 

 

 

ஒற்றியூ ரென்றஊ

  னத்தினா லதுதானோ

அற்றப் படஆ

  ரூரதென் றகன்றாயோ

முற்றா மதிசூடிய

  கோடிக் குழகா

எற்றாற் றனியே

  இருந்தாய் எம்பிரானே.  8 

 

 

நெடியானொடு நான்முக

  னும்மறி வொண்ணாப்

படியான் பலிகொள்ளும்

  இடங்குடி இல்லை

கொடியார்பலர் வேடர்கள்

  வாழுங் கரைமேல்

அடிகேள் அன்பதா

  யிடங்கோயில் கொண்டாயே.  9 

 

 

பாரூர் மலிசூழ்

  மறைக்கா டதன்றென்பால்

ஏரார் பொழில்சூழ்

  தருகோடிக் குழகை

ஆரூரன் உரைத்தன

  பத்திவை வல்லார்

சீரூர் சிவலோகத்

  திருப்பவர் தாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்