ஏழாம்-திருமுறை

025 பொன்செய்த மேனியினீர்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : முதுகுன்றம்

திருச்சிற்றம்பலம்

 

பொன்செய்த மேனியினீர்

  புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும்

  எரித்தீர்முது குன்றமர்ந்தீர்

மின்செய்த நுண்ணிடையாள்

  பரவையிவள் தன்முகப்பே

என்செய்த வாறடிகேள்

  அடியேனிட் டளங்கெடவே.  1 

 

 

உம்பரும் வானவரும்

  உடனேநிற்க வேயெனக்குச்

செம்பொனைத் தந்தருளித்

  திகழும்முது குன்றமர்ந்தீர்

வம்பம ருங்குழலாள்

  பரவையிவள் வாடுகின்றாள்

எம்பெரு மானருளீர்

  அடியேனிட் டளங்கெடவே.  2 

 

 

பத்தா பத்தர்களுக்

  கருள்செய்யும் பரம்பரனே

முத்தா முக்கணனே

  முதுகுன்றம் அமர்ந்தவனே

மைத்தா ருந்தடங்கண்

  பரவையிவள் வாடாமே

அத்தா தந்தருளாய்

  அடியேனிட் டளங்கெடவே.  3 

 

 

மங்கையோர் கூறமர்ந்தீர்

  மறைநான்கும் விரித்துகந்தீர்

திங்கள் சடைக்கணிந்தீர்

  திகழும்முது குன்றமர்ந்தீர்

கொங்கைநல் லாள்பரவை

  குணங்கொண்டிருந் தாள்முகப்பே

அங்கண னேயருளாய்

  அடியேனிட் டளங்கெடவே.  4 

 

 

மையா ரும்மிடற்றாய்

  மருவார்புரம் மூன்றெரித்த

செய்யார் மேனியனே

  திகழும்முது குன்றமர்ந்தாய்

பையா ரும்மரவே

  ரல்குலாளிவள் வாடுகின்றாள்

ஐயா தந்தருளாய்

  அடியேனிட் டளங்கெடவே.  5 

 

 

நெடியான் நான்முகனும்

  இரவியொடும் இந்திரனும்

முடியால் வந்திறைஞ்ச

  முதுகுன்ற மமர்ந்தவனே

படியா ரும்மியலாள்

  பரவையிவள் தன்முகப்பே

அடிகேள் *தந்தருளீர்

  அடியேனிட் டளங்கெடவே.

(* தந்தருளாய் என்றும் பாடம்)  6 

 

 

கொந்தண வும்பொழில்சூழ்

  குளிர்மாமதில் மாளிகைமேல்

வந்தண வும்மதிசேர்

  சடைமாமுது குன்றுடையாய்

பந்தண வும்விரலாள்

  பரவையிவள் தன்முகப்பே

அந்தண னேயருளாய்

  அடியேனிட் டளங்கெடவே.  7 

 

 

பரசா ருங்கரவா

  பதினெண்கண முஞ்சூழ

முரசார் வந்ததிர

  முதுகுன்ற மமர்ந்தவனே

விரைசே ருங்குழலாள்

  பரவையிவள் தன்முகப்பே

அரசே தந்தருளாய்

  அடியேனிட் டளங்கெடவே.  8 

 

 

ஏத்தா திருந்தறியேன்

  இமையோர்தனி நாயகனே

மூத்தாய் உலகுக்கெல்லாம்

  முதுகுன்ற மமர்ந்தவனே

பூத்தா ருங்குழலாள்

  பரவையிவள் தன்முகப்பே

கூத்தா தந்தருளாய்

  கொடியேனிட் டளங்கெடவே.  9 

 

 

பிறையா ருஞ்சடையெம்

  பெருமான் அருளாயென்று

முறையால் வந்தமரர்

  வணங்கும்முது குன்றர்தம்மை

மறையார் தங்குரிசில்

  வயல்நாவலா ரூரன்சொன்ன

இறையார் பாடல்வல்லார்க்

  கெளிதாஞ்சிவ லோகமதே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தல்
View Details
படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details
திருக்கூத்து
View Details