ஏழாம்-திருமுறை

023 செடியேன் தீவினையிற்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கழிப்பாலை

திருச்சிற்றம்பலம்

 

செடியேன் தீவினையிற்

  றடுமாறக் கண்டாலும்

அடியான் ஆவவெனா

  தொழிதல் தகவாமே

முடிமேல் மாமதியும்

  அரவும் உடன்றுயிலும்

வடிவே தாமுடையார்

  மகிழுங்கழிப் பாலையதே.  1 

 

 

எங்கே னும்மிருந்துன்

  அடியே னுனைநினைந்தால்

அங்கே வந்தென்னோடும்

  உடனாகி நின்றருளி

இங்கே என்வினையை

  அறுத்திட் டெனையாளும்

கங்கா நாயகனே

  கழிப்பாலை மேயானே.  2 

 

 

ஒறுத்தாய் நின்னருளில்

  அடியேன் பிழைத்தனகள்

பொறுத்தாய் எத்தனையும்

  நாயேனைப் பொருட்படுத்துச்

செறுத்தாய் வேலைவிட

  மறியாமல் உண்டுகண்டங்

கறுத்தாய் தண்கழனிக்

  கழிப்பாலை மேயானே.  3 

 

 

சுரும்பார் விண்டமலர்

  அவைதூவித் தூங்குகண்ணீர்

அரும்பா நிற்குமனத்

  தடியாரொடும் அன்புசெய்வன்

விரும்பேன் உன்னையல்லால்

  ஒருதெய்வம் என்மனத்தாற்

கரும்பா ருங்கழனிக்

  கழிப்பாலை மேயானே.  4 

 

 

ஒழிப்பாய் என்வினையை

  உகப்பாய் முனிந்தருளித்

தெழிப்பாய் மோதுவிப்பாய்

  விலையா வணமுடையாய்

கழிப்பால் கண்டடங்கச்

  சுழியேந்து மாமறுகிற்

கழிப்பா லைமருவுங்

  கனலேந்து கையானே.  5 

 

 

ஆர்த்தாய் ஆடரவை

  அரையார் புலியதள்மேற்

போர்த்தாய் ஆனையின்றோல்

  உரிவை புலால்நாறக்

காத்தாய் தொண்டுசெய்வார்

  வினைகள் அவைபோகப்

பார்த்தா னுக்கிடமாம்

  பழியில்கழிப் பாலையதே.  6 

 

 

பருத்தாள் வன்பகட்டைப்

  படமாகமுன் பற்றியதள்

உரித்தாய் ஆனையின்றோல்

  உலகந்தொழும் உத்தமனே

எரித்தாய் முப்புரமும்

  இமையோர்கள் இடர்கடியுங்

கருத்தா தண்கழனிக்

  கழிப்பாலை மேயானே.  7 

 

 

படைத்தாய் ஞாலமெலாம்

  படர்புன்சடை எம்பரமா

உடைத்தாய் வேள்விதனை

  உமையாளையோர் கூறுடையாய்

அடர்த்தாய் வல்லரக்கன்

  றலைபத்தொடு தோள்நெரியக்

கடற்சா ருங்கழனிக்

  கழிப்பாலை மேயானே.  8 

 

 

பொய்யா நாவதனாற்

  புகழ்வார்கள் மனத்தினுள்ளே

மெய்யே நின்றெரியும்

  விளக்கேயொத்த தேவர்பிரான்

செய்யா னுங்கரிய

  நிறத்தானுந் தெரிவரியான்

மையார் கண்ணியொடு

  மகிழ்வான்கழிப் பாலையதே.  9 

 

 

பழிசே ரில்புகழான்

  பரமன் பரமேட்டி

கழியார் செல்வமல்குங்

  கழிப்பாலை மேயானைத்

தொழுவான் நாவலர்கோன்

  ஆரூரன் உரைத்ததமிழ்

வழுவா மாலைவல்லார்

  வானோருல காள்பவரே.  10

 

திருச்சிற்றம்பலம்